பண்ணை மொத்த விலை சரிவு: பொள்ளாச்சியில் இளநீர் ரூ. 30க்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பண்ணை மொத்த விலை குறைந்தது. இதனால் ஒரு இளநீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவைக்கு அதிக கிராக்கி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரை வெயிலின் அதிகமாக இருந்ததால், இளநீர் விலை அதிகரித்து இருந்தது. அப்போது பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தியாகும் இளநீர் கனரக வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு அனுப்பப்பட்டன.

கடந்த மாதம் வரை இளநீருக்கு அதிக கிராக்கி இருந்தது. இதனால், பண்ணை நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.33 முதல் ரூ.35 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்ததனர். ஆனால், கடந்த 2 வாரத்துக்கு மேலாக, மகாராஸ்டிரா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மழை பெய்ய துவங்கியது. இதன் காரணமாக அம்மாநிலங்களுக்கு பொள்ளாச்சியில் இருந்து இளநீர் அனுப்புவது சற்று குறைந்தது.

மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் சாரல் பெய்வதால், பிற மாவட்டங்களுக்கும் இளநீர் அனுப்புவது குறைந்து உள்ளது. இதனால், விற்பனை மந்தமாகி உள்ளது. தற்போது தோட்டத்தில் பண்ணை விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக நெட்டை, குட்டை, வீரிய ஒட்டு ஆகிய வகை இளநீர் ரூ.30க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்தால், இளநீரின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என, ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்