பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் தொடரும் பருவ மழையால் மண்பானை தயாரிப்பு மந்தம்

*தொழிலாளர்கள் கடும் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை தொடர்வதால், மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டு, பானை உற்பத்தி மந்தமடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கடும் வேதனை தெரிவித்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களாக அங்கலக்குறிச்சி, கோட்டூர், சமத்தூர், ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாபாளையம், பொன்னாபுரம், வடுகபாளையம், வடக்கிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், மண்பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் மண்பானை, அகல்விளக்கு உள்ளிட்டவை குறிப்பிட்ட நாட்கள் உலர வைக்கப்பட்டு விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் மண்பாண்ட தொழில் தீவிரமாக நடந்தது. அச்சமயத்தில் மண்பானைகளின் தயாரிப்பு அதிகளவில் காணப்பட்டது. மேலும் வெயிலின் தாக்கத்தால் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட பானைகளின் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. கடந்த மே மாதம் சில நாட்கள் கோடை மழைக்கு பிறகு, கடந்த ஜூன் மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளதால், சுற்றுவட்டார கிரமங்களில் மண் பானை தயாரிப்பு பணி மந்தமானது. இதனால் மொத்த பணியில் பாதிக்கு மேல் முடங்கியுள்ளது. பானையை உலர வைக்க முடியாமலும், அதனை சூடுபடுத்த முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். இதையடுத்து மண்பானை தயாரிப்பு பணி வெகுவாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் இருக்கும்போது, வாரத்தில் 200 முதல் 250 பானைகள் வரை தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்புவோம். ஆனால், தற்போது பொழிந்து வரும் பருவமழையால் கடந்த ஒரு மாதமாக பானை, அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில வாரமாக 50க்கும் குறைவான பானைகள் தான் தயாரிக்கப்படுகிறது.

இருப்பினும், தயாரிக்கப்பட்ட பானைகள் வெயிலின் தாக்கம் இல்லாததாலும், வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதாலும் உலர்வதற்கு வெகு நாட்கள் ஆகிறது. அதுமட்டுமின்றி மழையால் வெட்ட வெளியில் பச்சை பானையை தீ மூட்டி காய வைக்க முடியாமல் உள்ளது. மழைப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் இருந்தால் மட்டுமே பானை தயாரிப்பு அதிகரிக்கும்’’ என தெரிவித்தனர்.

விடுபட்ட பெயர்களை இணைத்து நிவாரணம் வழங்க கோரிக்கை

மண் பாண்ட தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு இரு முறை அரசு மூலம், மழைக்கால நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள சில மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தொகை முறையாக கிடைக்காமல் உள்ளது. தற்போது மழையால் மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு வழங்க வேண்டிய உரிய நிவாரணத்தொகையை கால தாமதப்படுத்தாமல், விடுபட்டவர்கள் தொழிலாளர்களின் பெயரையும் இணைத்து உரிய நபர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி