அரசியலில் இருந்து என்னை போக வைப்பது மிகவும் கஷ்டம்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: ‘அரசியலில் இருந்து என்னை போக வைப்பது மிகவும் கஷ்டம்’ என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நேற்று 7வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது என்று சொல்கிறார்கள். முழுநேர அரசியல்வாதி என்பவர் யார்? ஒருவரும் கிடையாது என்பதே உண்மை.கோவையில் தோற்றேன் என்பது 1,728 வாக்குகளால் அல்ல. 90,000 பேர் அந்த தொகுதியில் வாக்களிக்கவில்லை. இதைத்தான் எனது தோல்வியாக நினைக்கிறேன். இந்தியா முழுவதும் 40 சதவீத மக்கள் வாக்களிப்பது இல்லை. அவர்கள் அனைவரும் வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

முழுநேர அரசியல்வாதி யார் என்று என்னை கேள்வி கேட்பவர்கள், வாக்களிக்காத இந்த 40 சதவீதம் யார் என்று கேட்க முடியுமா? இதுபோன்ற நிலையில், 95 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்யும் நேர்மையானவன் வெற்றிபெறவே முடியாது. என்னை அரசியலுக்கு வரவழைப்பது கஷ்டம் என்றார்கள். ஆனால், போக வைப்பது அதைவிட கஷ்டம். எஞ்சிய வாழ்நாள் முழுக்க இனி இப்படித்தான். இனி எனது எல்லாம் உங்களுடையதுதான். விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்திருக்கக்கூடிய விஷயத்தில் 10 சதவீதம் கூட ஒன்றியம் செய்யவில்லை. டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related posts

போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்