அரசியல் துறவற மனநிலைக்கு வந்த இலையின் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரரை காலி செய்யும் அளவுக்கு நெற்களஞ்சிய மாவட்டத்தில் பிரமாண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சவால்விட்டவரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் சமீபத்தில் சேலம்காரர் அணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சேலம்காரர் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி கட்சிக்காரர்களை துடிப்புடன் இருக்கும் நிலைக்கு வைத்துள்ளாராம். இதற்கு போட்டியாக குக்கர் கட்சி சார்பில் அடுத்த மாதம் அதுவும் நெற்களஞ்சியம் மாவட்டத்திலேயே பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. பெரிய அளவில் கூட்டத்தை காட்டி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவரது அணியில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு குக்கர் தலைமை அதிரடியாக உத்தரவு போட்டுள்ளாராம். முக்கியமாக இந்த பொதுக்கூட்டத்திற்கு சின்னமம்மி, தேனிக்காரர் ஆகியோரை அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்து தன் பலத்தை காட்ட முடிவு செய்துள்ளாராம். மூவரின் பவர் அப்போதுதான் சேலம்காரருக்கு தெரியும் என்று குக்கர் முடிவு செய்துள்ளாராம். அதற்கான வேலை திரைமறைவில் நடந்து வருகிறது. ஆனால், தேனிக்காரர், சின்னமம்மி பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவுதானாம். எனினும் தங்கள் ஆதரவாளர்களை மாநாட்டிற்கு அனுப்பி பிரமாண்டத்தை காட்ட பச்சைகொடி காட்டிவிட்டார்களாம் மற்ற இரண்டு பேரும். அதற்காக தேனி, சின்னமம்மி ஓகே சொல்லிட்டாங்களாம். இதனால் பெரிய அளவில் கூட்டத்தை காட்டுவதற்காக அவர்களது ஆதரவாளர்களும், குக்கர் ஆதரவாளர்களும் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளார்களாம். அதற்கு தேவையான பசையுடன்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி தலைமையான சேலத்தை ஓரங்கட்டும் நிலைக்கு மாஜி பால்வளத்துறை அமைச்சர் தள்ளப்பட்டுள்ளாராமே.. என்ன காரணமாம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய அரசில் பெரிய பதவியில் உள்ளவரை டாடி எனக்கூறி பேமஸான இலைக்கட்சி மாஜி பால்வள மந்திரி, கடந்த 2 ஆண்டுகளாக கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியே இருக்கார். பண மோசடி வழக்கில் தலைமறைவாகி தற்போது நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் இருந்து வருகிறார். தமிழ்நாட்டை விட்டு தாண்டக்கூடாது. மெடல் மாவட்டத்தை தாண்ட போலீஸ் அனுமதி வாங்கி தான் போக வேண்டுமென்பதால், வழக்கம்போல தன் அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறாராம். இலைக்கட்சி முக்கிய பொறுப்பில் சேலத்துக்காரர் அமர்ந்ததும், மரியாதை நிமித்தமாக தனது ஆதரவு படையை திரட்டிக் கொண்டு அவரது வீட்டிற்கு வாழ்த்து சொல்ல போனாராம். அப்போது அவருடன் சென்ற தொண்டர்கள் பால் வளத்தை ‘மாவீரன் வாழ்க’ என கோஷமிட்டாங்களாம். இதனால் டென்ஷனான சேலத்துக்காரர், தொண்டர்கள் மத்தியிலேயே மாஜி பால்வள அமைச்சரை காய்ச்சி எடுத்துட்டாராம். இதனால், விரக்தியின் விளிம்பிற்கு சென்ற அவர் சொந்த கட்சியில யாரும் மதிக்கல… மற்ற கட்சிக்கு போகவும் மனமில்லை எனறு தனக்கு வேண்டியவர்களிடம் புலம்பி வருகிறாராம். மாவட்டத்தில் கட்சி பணியில் இருந்து விலகியே இருக்கிறாராம். மன உளைச்சல் காரணமாக மெடல் மாவட்டம் முழுவதும் நடந்த சேலத்துக்காரரின் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கவில்லையாம். இந்த நிலையை பார்த்தால் அரசியலில் இருந்து விரைவில் துறவறம் மேற்கொண்டாலும் சொல்வதற்கில்லை என்ற பேச்சே அதிகமாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகளை பிளாக்மெயில் செய்யும் கட்சியை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆட்சியில் இல்லாவிட்டால் கூட, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் கட்சி என்று கூறிக்கொள்கிறார்கள் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தும் தனி ராஜாங்கம் பிரதான கட்சிகளையே மிரள வைக்குதாம். குறிப்பா வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்து மாவட்டங்கள்ல ஒன்றிய பகுதிகளில் நடக்கும் அனைத்து கான்ட்ராக்ட்களிலும் தங்களுக்கும் ஒதுக்கீடு வழங்கணும். இல்லைனா, வேலை சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லைனு வேலையை நிறுத்துவோம், எங்களை பாகுபாடு காட்டி ஒதுக்குறீங்கனு கும்பலை சேர்த்து கூச்சல் போடுவோம்னு அதிகாரிகளையே மிரட்டி வேலையை வாங்குறாங்களாம். அதுமட்டுமில்லாம, எல்லா துறை அதிகாரிகளின் வில்லங்கங்களை தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்து வேலையை முடித்துக் கொள்கிறார்களாம். மணல் அள்ளுறது, போலீஸ் ஸ்டேஷன்ல கட்ட பஞ்சாயத்துனு கரன்சி வேட்டைல கலக்குறாங்களாம். இதனால இவங்களை பார்த்தாலே காக்கிங்க மட்டுமின்றி, அரசு அதிகாரிங்களே மிரண்டு ஓடுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு