அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் காட்டம்!!

சென்னை: அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்ற பேரவையில் உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரின் கடமைப் பொறுப்பாகும்.

வரும் ஆண்டில் (2024-25) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவையின் கவனத்துக்கு கொண்டு, அதன் மீது எதிர் தரப்பின் கருத்துக்களை அறிவது என்பது அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமையாகும். பேரவையில் உரையாற்றும் ஆளுநருக்கு பேரவையின் வாயிலாக “நன்றி தெரிவிக்கும்” தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைப்பிடித்து வரும் மரபாகும்.

இந்த வழக்காறுகளுக்கும். மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார். கூட்டத் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப் பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல் மரபாகும். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு