அரசியல் கட்சித் தலைவர்களின் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: `செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும்; `உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் மக்கள் அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வாழ்த்துகள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: விஜயதசமி தினத்தன்று நாம் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு புதிய சாதனைகள் படைப்பதற்கான பணிகளை இந்நாளில் தொடங்கிடுவோம். தீய சக்தியை அழித்து துர்கா
தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழிலில் முன்னேற்றங்கள் காணவும், இறைவன் அருள் புரியட்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்:அறிவை தரும் கல்வி நம் வாழ்கை முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அந்த கல்வியையும், பண்பாடு, காலச்சாரம், ஞானம், இசை, அறிவு போன்றவற்றை வழங்கும் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகிறோம். அறிவை தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும் இயந்திரங்களை போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளை பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள். தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார்: கல்வி, கலை, தொழில் ஆகியவற்றை தொடங்கி வளம் பெருகவும் தீய சக்திகளை புறந்தள்ளி நேர்மறை சிந்தனைகளோடும், உறுதி சிறிதும் குறையாத நெஞ்சோடு உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் நம்பிக்கையோடு தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும், கல்வியும், செல்வமும் பெற்றிட வாழ்த்துகள்.

உலக தமிழ் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோசம்: இது இந்திய நாட்டுக்குரிய விழாவாகும். வேறு எந்த நாட்டுக்கும் இப்படியொரு விழா இல்லை. கல்வி மற்றும் தொழில் நமக்கு இரண்டு கண்களாக கருதப்படுவதால், இந்தாளில் தொழிலுக்காக ஆயுதங்களையும் வணங்கும் வழக்கம் உருவானது. அனைவரும் புதிய தொழில்களை தொடங்கி வாழ்வில் வளமடைய இறைவனை வேண்டுகிறேன். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத் குமார்: செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப, தொழிலை வணங்குவதற்கான தினமாகவும், வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்த கல்வியை வணங்குவதற்கான தினமாகவும், எடுத்த செயல்களில் வெற்றி காண்பதற்கான தினமாகவும் அமைந்த இந்த நவராத்திரி பண்டிகை தினங்களில் மக்களின் எண்ணங்கள் ஈடேறவும், அனைவரது வாழ்வு வளம்பெறவும் எல்லாம் வல்ல இறை அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், நமது உரிமை காக்கும் கட்சி நிறுவன பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன், சமத்துவ
மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்-தேசிய தலைவர் ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி