அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசி யூடியூப்பில் வருமானம் சம்பாதிக்க தரம் தாழ்ந்து வீடியோ வெளியிடுவதா? சாட்டை துரைமுருகனுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மதுரை: யூடியூப்பில் வருமானம் சம்பாதிக்க அரசியல் தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து வீடியோ வெளியிடுவதா என சாட்டை துரைமுருகனுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி அவதூறாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார், என் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக உள்ளேன்.

எனவே, உடனே ஜாமீன் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, ‘‘குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகன், ஏற்கனவே பொது இடங்களில் அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசமாட்டேன் என கோர்ட்டில் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளார். ஆனால், மீண்டும் அதே தவறையே செய்து வருகிறார்.

தற்போது மீண்டும் பொது இடத்தில் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் அவதூறாக பேசி வருகிறார். தற்போது பொதுக்கூட்ட மேடையில் சண்டாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதனால் திருச்சி சைபர்கிரைம் போலீசார் வன்கொடுமை சட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் தற்போது சாட்டை துரைமுருகன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையை நாடியுள்ளார் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, யூடியூபில் அதிக சந்தாதாரர் கிடைக்க வேண்டும். நல்ல வருமானம் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் சாட்டை துரைமுருகன், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரை வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து பேசலாமா? அந்த வீடியோக்களை அப்படியே யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாமா?. இதுபோல் அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசி யூடியூபில் வீடியோ வௌியிட மாட்டேன் என சாட்டை துரைமுருகன் ஐகோர்ட்டில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரி மனு செய்தால் கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

* அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசி யூடியூபில் வீடியோ வௌியிட மாட்டேன் என சாட்டை துரைமுருகன் ஐகோர்ட்டில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

Related posts

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு