மகனுக்கு மந்திரி பதவிக்காக கொள்கையை அடகு வைக்கலாமா? உயிர் நீத்தவர்களின் ஆன்மா மன்னிக்குமா?

* வன்னியர் இடஒதுக்கீட்டு எதிராக போராட்டம் நடத்திய பாஜவுடன் கூட்டா

* கொதிக்கும் பாட்டாளி சொந்தங்கள்

வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதமும், மத்தியில் 2 சதமும் இட ஒதுக்கீடு, மண்டல் குழு பரிந்துரையை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து 17.09.1987 – 23.09.1987 தேதிகளில் வன்னியர் சங்கம் நடத்திய தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் 21 பாட்டாளி சொந்தங்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடியவர்களுக்கு மயானத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடந்த போராட்டத்தை ஒன்றிய அரசின் துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து, எம்.ஜி.ஆர் தலைமையிலான மாநில அரசு அடக்கியது. 1989ல் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்ற உடன் 1989-ல் அனைத்து வன்னியர் சங்க மற்றும் சமூக தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, வன்னியர் சமூகத்துடன் சேர்ந்து 108 சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்தில் இருந்து தனியாக 20 சதவிகிதத்தை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை கலைஞர் உருவாக்கினார்.

வன்னிய சமூகத்தினர், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றனர். இதற்காக கலைஞருக்கு பாமக நிறுவனர் பாராட்டு விழாவும் நடத்தினார். இந்திய நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை இந்தியாவே ஆதரிக்க, அதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் நடத்தியது.

இட ஒதுக்கீடு தங்கள் ஆதிக்கத்தை உடைத்துவிடும் என்பதால் மநுவாத இந்துத்துவ ஆதிக்க கோட்பாட்டால் வழி நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனாலும் பாஜவுடன் பாமக ஏற்கனவே கூட்டு சேர்ந்து போட்டியிட்டது பழைய கதை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜ அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிரான வேலைகளை தொடர்ந்து செய்து வரும் சூழ்நிலையில், அந்தக் கட்சியோடு கூட்டணி வைப்பது நியாயமா என்று பாட்டாளி சொந்தங்கள் அங்கலாய்க்கின்றனர்.

அன்புமணிக்காக பாஜவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்கும் முடிவை எடுத்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால், மகனுக்காக கட்சியை அடகு வைப்பதா என்றும் பாட்டாளி சொந்தங்கள் பதைபதைக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று வாய்சவடால் விட்டு, வாயிலே வடை சுட்டு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களில் 9.50 லட்சம் காலியிடங்களை பூர்த்தி செய்யவில்லை.

அப்படி பூர்த்தி செய்தால்தானே இட ஒதுக்கீடு அமலாகும். ஆனால் அதை மோடி தலைமையிலான பாஜ அரசு செய்யவில்லை. எனவே யாருக்குமே வேலை இல்லை. மேலும், அரசுத்துறை நிறுவனங்கள் இருந்தால்தானே இடஒதுக்கீடு கேட்பீர்கள் என்று கொழுத்த லாபம் ஈட்டக் கூடிய இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) உள்பட பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது பாஜ தலைமையிலான ஒன்றிய மோடி அரசு.

கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள் எண்ணிக்கை 2500க்கும் மேல், இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அடித்தட்டு மக்கள் உயர் கல்வி பெறக்கூடாது, அரசாங்கத்தில் உயர்ந்த பதவிக்கு வரக்கூடாது என்று கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக கிராமப்புற மாணவர்கள் – இதில் வன்னிய சமூகம் உள்பட அனைத்து சமூக ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்வியை பெறக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாநில அரசுகள் வைக்கின்ற கோரிக்கைகளை தூக்கி குப்பைக் கூடையில் போட்டது மோடி தலைமையிலான பாஜ ஒன்றிய அரசு. தமிழக நலன்களுக்கு மட்டுமல்ல… ஓட்டு மொத்த இந்திய மக்களின் நலன்களுக்காக எதிராக, இடஒதுக்கீட்டு எதிராக செயல்படும் பாஜவோடு வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட பாமக, பாஜவுடன் கூட்டணி சேரலாமா? மகனுக்கு மந்திரி பதவிக்காக கொள்கையை அடகு வைக்கலாமா? இடஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்தவர்களின் ஆன்மா மன்னிக்குமா என்று பாட்டாளி சொந்தங்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

* கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடியவர்களுக்கு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் மயானத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

* 1989ல் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றதும் வன்னியர் சமூகத்துடன் சேர்ந்து 108 சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்தில் இருந்து தனியாக 20 சதவிகிதத்தை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்காக கலைஞருக்கு ராமதாசே பாராட்டு விழா நடத்தினார்.

* கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களில் 9.50 லட்சம் காலியிடங்களை பூர்த்தி செய்யவில்லை. அப்படி பூர்த்தி செய்தால்தானே இட ஒதுக்கீடு அமலாகும். ஆனால் அதை மோடி தலைமையிலான பாஜ அரசு செய்யவில்லை.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு