போலீஸ் பாதுகாப்பு வைத்து கொள்வது பேஷனாகிவிட்டது: பாஜ பிரமுகர் வழக்கில் ஐகோர்ட் கிளை காட்டம்

மதுரை: திருச்சியை சேர்ந்த பாஜ ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘செல்போன் மூலமும், நேரடியாகவும் என்னை பலரும் மிரட்டுகின்றனர். என் கார் மீது பஸ்சை மோதச்செய்து என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்சி பணிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். என்னை மர்ம நபர்கள் பின்தொடர்கின்றனர். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். போலீசார் தரப்பில், ‘‘மனுதாரர் மீது வழக்குகள் உள்ளன. அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை’’ என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘மனுதாரர் யார் என்பது தெரியும். ஒருவர் 2 போலீசாரை பாதுகாப்பிற்கு வைத்துக் கொள்வது பேஷனாகி விட்டது’’ என்றார். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி