போலீசார் அழிக்கச் சென்ற இடத்தில் ரூ.50 லட்சம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்

திருமலை: ஆந்திராவில் பொதுத்தேர்தலின்போது வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பொக்லைன் ஏற்றி அழிக்கப்பட்டது. இதைப்பார்த்து ஏங்கிய மதுப்பிரியர்கள் போலீஸ் முன்னிலையில் போட்டி போட்டு மதுபாட்டில்களை அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலின் போது குண்டூர் மாவட்டம் முழுவதும் நடத்திய வாகன சோதனையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 24 ஆயிரத்து 31 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்கும் பணி எஸ்.பி. சதீஷ்குமார் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. நல்லச்செருவில் உள்ள குப்பைக்கிடங்கில் மதுபானங்களை வரிசையாக தரையில் அடுக்கிய போலீசார், காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் அவற்றை பொக்லைன் மூலம் ஏற்றி அழித்தனர். இதனையறிந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்த மதுபிரியர்கள் அங்கு குவிந்தனர்.

மதுபாட்டில்களை தங்களது கண்ணெதிரே நொறுக்குவதை கண்டு ஏக்கத்துடன் பார்த்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். குறைந்தளவு போலீசார் அங்கு இருந்தனர். இதனை கண்ட மதுபிரியர்கள், மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளினர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனாலும் மதுபிரியர்கள், பாட்டில்களை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்