சங்கரன்கோவில் அருகே போலீஸ்காரர் வெட்டிக்கொலை: வாலிபருக்கு வலை


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் சுருக்கெழுத்தராக பணிபுரியும் போலீஸ்காரர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியை சேர்ந்தவர் பெரியதுரை (31). போலீஸ்காரரான இவர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்பி சிஐடி சுருக்கெழுத்தராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி குணா மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தேர்வு ஒன்றை எழுதி விட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை பெரியதுரைசொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது உறவினர்கள் அல்லித்துரை மற்றும் அருண்குமார் (29) ஆகிய இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அருண்குமாருக்கு அல்லித்துரை போன் செய்து உங்களிடமும், பெரியதுரையிடமும் சமாதானம் பேச வேண்டியுள்ளது. எனவே கல்லத்திகுளம் மலைக்காட்டு பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி மலைக்காட்டு பகுதிக்கு அருண்குமார், நண்பருடன் சென்றுள்ளார். அங்கு மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அருண்குமாருக்கும், பெரியதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெரியதுரையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த அல்லித்துரை அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவலறிந்து சின்ன கோவிலான்குளம் போலீசார் சென்று, பெரியதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து தப்பிச் சென்ற அருண்குமார், நண்பரை தேடி வருகின்றனர். இது ெதாடர்பாக எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில், அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே அல்லித்துரை மற்றும் பெரியதுரையின் உறவினர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்