ரவுடியை பிடிக்க சென்ற போலீஸ்காரர் காயம்: பெண் உள்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது கீழே விழுந்ததில் காவலர் காயமடைந்தார். ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (22), பிரபல ரவுடி. இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இதனால் இவனை பிடிக்க காசிமேடு ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் காசிமேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி போலீசார் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் சஞ்சய் தப்பிக்க முயன்றான். ஆனால் போலீசார் அவனை மடக்கிப் பிடித்தனர். அப்போது சஞ்சய்யின் அண்ணன் ராமு என்ற வெங்கட்ராமன் (24), உறவினர் நரேஷ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து சஞ்சய்யை கைது செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து சஞ்சய் தப்பி ஓடினான்.

போலீசார் அவனை துரத்திப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் காவலர் கோபிநாத்திற்கு காலில் காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து மோதலில் ஈடுபட்ட சஞ்சய், நரேஷ், ராமு சஞ்சய்யின் தாய் அமுதவல்லி (47) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகிறார்கள்.

Related posts

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம்

வண்டல் மண் எடுக்க 3ம் தேதி முதல் இணையதள அனுமதி

தப்பி ஓடிய அதிமுக சாராய வியாபாரி 24 மணி நேரத்தில் கைது