பூந்தமல்லி அருகே விசாரணைக்கு சென்ற காவலரை ஓடஓட விரட்டிய போதை ஆசாமிகளால் பரபரப்பு: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல், சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை: பூந்தமல்லி அருகே, வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற காவலரை போதை ஆசாமிகள் ஓடஓட விரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் திருமாவளவன் என்பவர் நேற்று முன்தினம் கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் திருமாவளவனை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் அவரை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். இதில் காயமடைந்த திருமாவளவன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் சரவணன் சம்பவம் குறித்து விசாரிக்க அங்கு சென்றார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று பேரும் கையில் கத்தியுடன் போலீஸ்காரரை ஓடஓட விரட்டினார்கள். கையில் தடி இருந்தும் அந்த போலீஸ்காரர் திரும்பி ஓடினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து, பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி கஞ்சா போதையில் அட்டகாசம் செய்ததாக, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி (19), சூர்யா (20), சந்தோஷ் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

போலீசாரையே கத்தியை காட்டி மிரட்டிய 5 பேரும் சேர்ந்து கொண்டு மாங்காடு, பெரியகொளுத்துவான்சேரி, கோவூர் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் குத்தியும் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து வந்துள்ளனர். அந்த பணத்தில் உல்லாசமாக இருந்து விட்டு, கோயில் திருவிழாவில் கஞ்சா போதையில் மேலும் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார், மாங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து செல்போன், மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவர்கள் இரண்டு பேரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட போதை ஆசாமிகள், விசாரிக்க சென்ற காவலரை ஓடஓட விரட்டிய சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை