போலீஸ் காவலில் இறந்ததாக கூறப்படும் டாஸ்மாக் கேன்டீன் ஊழியர் உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் கேன்டீன் ஊழியர் உடலை, ஐகோர்ட் உத்தரவின்படி தோண்டி எடுத்து கலெக்டர், எஸ்பி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. விழுப்புரம் பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜா (45). கார்த்திக் என்பவருக்கு சொந்தமான டாஸ்மாக் கேன்டீனில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஞ்சு (41), 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி சட்டவிரோத மது விற்பனை புகாரில் தாலுகா காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் வீட்டிற்கு சென்றதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனிடையே போலீசார் தாக்கியதில்தான் தனது கணவர் உயிரிழந்ததாக மனைவி அஞ்சு குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். எனது கணவர் உயிரிழந்ததும் அவரது உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, தகனம் செய்யுமாறு போலீசார் மிரட்டியதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராஜாவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கை அளிக்கவும், காவல்நிலையத்தில் ராஜா விசாரணைக்கு சென்றது, வெளிவந்தது முதல் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை 7 மணியளவில் கே.கே ரோட்டில் உள்ள இடுகாட்டில் கலெக்டர் பழனி, எஸ்பி தீபக்சிவாச், மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் ராஜாவின் உடல் ேதாண்டி எடுக்கப்பட்டது.

அப்போது அவரது மனைவி அஞ்சு மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் சதாசிவம், மதுரை டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவகுழுவினர் ராஜவின் உடலை மறு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டது. தொடர்ந்து உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி மாஜிஸ்திரேட் ராதிகா மருத்துவகுழுவினரிடம் அறிக்கை பெற்றார். பிற்பகலுக்கு பிறகு ராஜாவின் உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. மறு பிரேத அறிக்கையை மருத்துவக்குழுவினர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். அதன்பிறகுதான் அவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தாரா? என்பது தெரியவரும்.

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு