காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை

*கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நெல்லை : நில பிரச்னை தொடர்பாக காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுப்போர் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழையூத்து, நாரணம்மாள்புரம் பேரூராட்சி பொதுமக்கள் 15க்கும் மேற்பட்ட வேன்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக சாலையானது பேரிக்கார்டுகள் வைத்து மூடப்பட்டது.

நாரணம்மாள்புரம் பேரூராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், சங்கர்நகர் பேரூராட்சி சேர்மன் பட்டுலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் பொருட்டு நேற்று காலை 15க்கும் மேற்பட்ட வேன்களில் திரண்டு வந்தனர். கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகே வந்து இறங்கிய இவர்கள், தொடர்ந்து மனு அளிக்க கலெக்டர் அலுவலக சாலையில் திரண்டு வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக சாலையை பேரிக்கார்டுகள் வைத்து மூடிய போக்குவரத்து போலீசார், அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

பின்னர் நாரணம்மாள்புரம் பேரூராட்சி மக்கள் சார்பில் சேர்மன் உமா மகேஸ்வரி கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நாரணம்மாள்புரம் தேர்வு நிலை பேரூராட்சியில் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். எனது தந்தை பேச்சிபாண்டியன் முன்னாள் பேரூராட்சி தலைவராகவும், தற்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சங்கர்நகர் பேரூராட்சியில் தோல்வியடைந்தவர்கள் பேரூராட்சியில் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர்.

இதைத் தடுக்கச்சென்ற எனது தந்தை பேச்சிபாண்டியன் மீது உண்மைக்கு மாறாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இட பிரச்னை தொடர்பாகவும் அவர் மீது பொய் புகார்கள் அளித்து வரும் நபர்கள், இத்தகைய புகாரை வாபஸ் பெற ரூ.50 லட்சம் தருமாறு பேரம் பேசி வருகின்றனர். எனவே, நில பிரச்னை தொடர்பாக காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுப்போர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதோடு கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!