கோவை மாநகரில் செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

கோவை: கோவை மாநகரில் உள்ள மதுபானக் கூடங்களுக்கு மது அருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக் கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பார்கள் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும் . காவல்துறையினர் கேட்கும்போது கொடுக்கும் வகையில் சிசிடிவி பதிவுகளை சேமித்து வைக்க வேண்டும். மது அருந்த வருபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் பார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும்.

23.08.2024 முதல் 25.08.2024 முதல் வரையிலான கடந்த தினங்களில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல்துறையில மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில் 120 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் ன பொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்கருக்கும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திய ஒருவருக்கு சொந்த டிரைவர் இல்லாத நிலையில், மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் அல்லது மதுபானக் கூடத்தின் ஏற்பாட்டில் ஓட்டுநர் ஒருவர் மது அருந்திய நபரை அவரது வீட்டில் விட வேண்டும். நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநரை மதுபானக் கூடம் ஏற்பாடு செய்ய வேண்டும். மது அருந்துவோர் வேறு ஏதேனும் போதைப்பொருளை உபயோகிக்கிறார்களா என பார்க்கவேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மது அருந்த தங்களது மதுபானக்கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மதுபானக்கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதை தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும். சிசிடிவி பதிவுகள் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். காவல்துறையினர் கோரும் பொழுது அது அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும்.

மேலே கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியமைக்காக முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ. 10,000/- வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

இதே தவறை இரண்டாவது முறையாக செய்லோர் மீது ரூ. 15,000/- வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், இக்குற்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுபவரது வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் அனைவரும் சுவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது என்று காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு