மாவட்டம் முழுவதும் கோயில்களில் மூலவரை படம் பிடிக்க பக்தர்களுக்கு தடை-மீறினால் காவல் துறை நடவடிக்கை

ராமநாதபுரம் : ஆகம விதி மற்றும் பாதுகாப்பு நலன் காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் உள்ள மூலவரை படம் பிடித்தல், பக்தர்களை அர்த்த மண்டபத்தில் நிற்க வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்தல் உள்ளிட்டவற்றிற்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கோயில் நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழமையும், புரதானமும் நிறைந்த கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

மாவட்டத்தில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை ராமநாதசுவாமி கோயில் உலக புகழ் பெற்றது. இங்கு நாள்தோறும் பல்வேறு வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்கள் புகழ்பெற்றவை என்பதால் தை மற்றும் ஆடி அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனை போன்று ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற சிவன் கோயிலான மங்களேஸ்வரி அம்மன் உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜர், சுயம்புவாக தெற்கு முகம் பார்த்து காட்சியளிக்கிறார். சுமார் 6 அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலைக்கு ஒலி. ஒளியால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக சுமார் 25 கிலோ எடையுள்ள சந்தனம் பூசப்பட்டு, ஆண்டில் ஒருநாள், மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தன்று களைப்படுவது வழக்கம்.

இந்த மரகத நடராஜருக்கு தினந்தோறும் அபிஷேகம், பூஜைகள் செய்ய முடியாது என்பதற்காக வருடத்தில் 364 நாட்கள் சிறிய வடிவிலான ஸ்படிக லிங்கத்திற்கும், மரகத லிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது. இதுபோன்று பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இடம் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களான திவ்ய தேசங்களில் 44வது திருத்தலமாகவும், தசாவதாரங்களில் ஒன்றான ராமர் அவதாரத்திற்கு பெருமாள் அருள் புரிந்த, ராமாயண காலத்திற்கு முந்தையதாகவும், ராமாயணத்தில் தொடர்புடையதாகவும் திருப்புல்லாணி பத்மாஸினித் தாயார் உடனுரை ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் உள்ளது.

இதுபோன்று திருவாடானை சினேகவள்ளி அம்மன் உடனுறை ஆதிரெத்தீனேஸ்வரர்(சிவன்), தொண்டி திருவெற்றியூர் வன்மீக நாதர்(சிவன்) உடனுரை பாகம்பிரியாள் கோயில், நயினார்கோயில் சவுந்திரநாயகி அம்மன் உடனுறை நாகநாதர்(சிவன்), தேவிப்பட்டிணம் நவபாசனம் மற்றும் கடல் அடைத்த பெருமாள் கோயில் புகழ்பெற்றவை.திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மன், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்(சிவன்). மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர்(சிவன்), சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர்(சிவன்), டி.எம்.கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர்(சிவன்) ஆகிய கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்த மிகப்பழமையான கோயில்களாக உள்ளன.

இந்த கோயில்களில் மூலவர் சிலை, மரக, ஸ்படிக சிலைகள், உலோக சிலைகள் மற்றும் தங்கம் உள்ளிட்ட நகை ஆபரணங்கள் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. இதனை போன்று கலை நயமிக்க சிற்பங்கள் மிக நுணுக்கமானவையாக உள்ளது. சில ஆச்சரியமூட்டும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இதனை போன்று உலோகத்தால் ஆன உற்சவர் சிலைகள் உள்ளிட்ட சிலைகள் மிக,மிக தொன்மையானவையாக உள்ளது.

இதனால் கோயில்களில் ஆகமவிதி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டோ எடுப்பதற்கு தடை உள்ளது. சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. போட்டோ எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் கோயில்களில் விளம்பர பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோயில்களில் விஷேச காலங்கள் மட்டுமின்றி திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் இந்த சிறப்பு தினங்களில் மட்டும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வ மிகுதியால் செல்போன்களில் சிலைகளை போட்டோ, வீடியோ எடுத்தல், செல்பி மற்றும் குழு போட்டோ எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கருவறையில் உள்ள மூலவரையும் படம் பிடித்து கோயில் மற்றும் சிலை உருவ போட்டோக்களை சமீப காலமாக சிலர் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருவது அதிகரித்துள்ளது.

இதனால் ஆகமவிதி மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கோயில் சிலை பாதுகாப்பும் கேள்வி குறியாகி வருகிறது. ஏற்கனவே கோயிலில் போட்டோக்கள் எடுப்பதற்கு தடையும், கட்டுப்பாடுகளும் இருந்து வரும் நிலையில் அர்ச்சகர்கள்,கோயில் ஊழியர்கள் கவனக் குறைவாக இருக்கும் நேரங்களில் ஒரு சில பக்தர்கள் படம் பிடித்து வெளியிட்டு வருகின்றனர்.

சில கோயில்களில் சாமி தரிசனத்திற்காக கருவறைக்கு அருகிலுள்ள அர்த்த மண்டபம் வரையிலும் அழைத்து சென்று மூலரை தரிசிக்க அனுமதிக்கின்றனர். இதனால் ஆகமவிதிகள் மீறப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த மாதம் ராமேஸ்வரம் கோயிலுள்ள மூலவர் விக்கிரகம் வலைதளங்களில் பரவியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்து, ஒலி பெருக்கியிலும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனை போன்று கோயில் வெளி மற்றும் உள்புறத்தில் ஆங்காங்கே செல்போன் தடை குறித்து விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் மற்றும் அந்தந்த கோயில் நிர்வாக செயல் அலுவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு கடுமையாக பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கோயில் வளாகத்திற்குள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மீறி எடுப்போரை பிடித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு

கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்

தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்