Saturday, June 29, 2024
Home » விஷ சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5000; பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விஷ சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5000; பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Mahaprabhu

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ரூ.5 லட்சம் வைப்புத்தொகையும், அவர்களுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), கோ.க.மணி (பாமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வீ.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), நயினார் நாகேந்திரன் (பாஜ) வைத்திலிங்கம் (அதிமுக ஓபிஎஸ் அணி), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனைச்செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), அப்துல் சமது (மமக) ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இங்கு பேசிய உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததோடு அரசுக்கும் பல ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு நிச்சயமாக அதை கவனத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரும் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தன் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அதனைச் செய்யாமல் இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்னையிலும் அரசியல் காரணங்களுக்காக தன் கட்சியினருடன் வெளியே சென்று விட்டார். அவருக்கும் சேர்த்தே விவரங்களை தங்கள் வாயிலாக இப்பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 19ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரத்தை சேர்ந்த 47 பேர் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்திய காரணத்தினால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களை போலவே நானும் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளை செய்திட அறிவுறுத்தினேன். இந்த சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டுமல்லாமல், உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையை கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.,யும் நேரில் சென்று விசாரணையை தொடங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இதேபோன்ற சம்பவம் தொடர்பான வழக்கை இந்த அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரண்டு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில், விழுப்புரம் வழக்கை பொறுத்தவரையில், 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்; 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வழக்கை பொறுத்தவரையில், 6 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது; 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

6 காவல் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாவண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல விரும்புகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. நமது அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சத்து 61 ஆயிரத்து 84 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு சட்டவிரோத மதுபான கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றை தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் மாதாந்திர அறிக்கைகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளத்தனமான முறையில் நம் மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டு இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

மேலும், அரசின் அறிவுரையின்படி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் ஆகியோரை கொண்டு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன். இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி இந்த அரசு கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும்.

அதனடிப்படையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்த தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதன் அடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

You may also like

Leave a Comment

6 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi