பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம்

*வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூர் : பொய்கை மாட்டுச்சந்தையில் புயல் மழைக்கு பின்னர் நேற்று கால்நடைகள் குவிந்த நிலையில் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக பொய்கை மாட்டுச்சந்தையில் பருவமழை சீசனில் தீவன பற்றாக்குறை இருக்காது என்பதால் வர்த்தகம் கன ஜோராக நடக்கும்.

ஆனால் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் மழை காரணமாக கால்நடைகள் வரத்து குறைந்து காணப்பட்டதால் வர்த்தகம் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்பட்டு, வியாபாரமும் ரூ.90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நடந்ததாக கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுபற்றி மேலும் அவர்கள் கூறுகையில், ‘பொதுவாக மழைக்காலங்களில் வியாபாரம் அதிகரிக்கும் என்றாலும், மிக்ஜாம் புயல் மழை காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படவில்லை. மழை நின்ற நிலையில் இன்று(நேற்று) கால்நடைகள் அதிகளவில் வந்துள்ளன. விலையும் கால்நடைகளை வாங்குவோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உள்ளதால் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது’ என்று தெரிவித்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது