23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: தொழில்துறை வல்லுநர்களும் பங்கேற்பு

டெல்லி: 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து 23ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதுதொடர்பாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.

இந்த நிலையில் ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு, நாட்டின் நிதி நிலைமை, வாய்ப்புகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்த கூட்டத்தில் தங்களது பரிந்துரைகளை பொருளாதார வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் வழங்குவார்கள். மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையின் போது, ​​பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனால் இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் இருக்கும். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடினார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related posts

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 6ம் தேதி வரை மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களின் 5 மேலாண் இயக்குநர்கள் பணியிட மாற்றம்