விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் தொடங்கினார்: போலீஸ் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி நகரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதையொட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி நகரம் கொண்டு வரப்பட்டது. கப்பல்கள், ஹெலிகாப்டர்களில் ரோந்து வந்து அதிகாரிகள் கண்காணித்தனர். கடலில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டது. அதேநேரம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. ஆறு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் 7வது கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. நாளை இறுதி கட்ட தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறும் வேளையில் பிரதமர் மோடி ஆன்மிக தலங்களுக்கு சென்று தனிமையில் தியானம் செய்வது வழக்கம். கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலின் போது இறுதி கட்ட பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கேதர்நாத் கோயிலில் உள்ள பனிக்குகையில் 17 மணி நேரம் மோடி தியானம் செய்தார். இந்த முறை அவர் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு வந்து, கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி தியானம் செய்ய திட்டமிட்டார்.

இதற்காக நேற்று பஞ்சாப்பில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் சுமார் அரை மணி நேரம் ஓய்வெடுத்தார். அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு பகவதி அம்மனை வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர் 10 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து காரில் நேராக படகுத்துறை புறப்பட்டார். அங்கிருந்து ‘விவேகானந்தர்’ என்ற பெயருடைய தனிப்படகில் விவேகானந்தர் மண்டபம் புறப்பட்டு சென்றார். அங்குள்ள விவேகானந்தர் சிலையை வணங்கினார். நூலகத்தை பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடி தனிமையில் தனது தியானத்தை தொடங்கினார்.

இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் அவர் ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தியானத்தை நிறைவு செய்துவிட்டு புறப்படுகிறார். மாலை 3.10 மணிக்கு விவேகானந்தர் மண்டப படகுத்துறையில் இருந்து தனிப்படகில் புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிப்பேட் செல்கிறார். அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடத்தில் 45 மணி நேரம் 25 நிமிடங்கள் பிரதமர் மோடி தங்கியிருக்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் 3 நாட்கள் தங்குகின்ற நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள மூன்று அறைகள் அவருக்காக தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் அவர் தங்கும் வகையில் புதிதாக 2 கட்டில்கள், சாய்வு நாற்காலி போன்றவை வைக்கப்பட்டுள்ளன. புதிதாக 2 டன் ஏசி ெபாருத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மற்றொரு அறையில் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மோடிக்கு தேவையான உணவு அங்கு தயார் செய்து வழங்கப்படும். அடுத்துள்ள அறை பிரதமரின் அலுவலகமாக செயல்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான கூடத்தில் மோடி தியானம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தியானத்துக்காக கன்னியாகுமரி நகரமே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடல், வான் , தரை பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் விவேகானந்தர் நினைவிடம், படகுத்துறைகள், ஹெலிபேட் தளம் ஆகியன முழுமையாக பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு கடலோர காவல்படை ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் ஐஜி கண்ணன், டிஐஜி பிரவேஷ்குமார், குமரி மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம், கடற்படை, எஸ்பிஜி அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். விவேகானந்தர் பாறையில் எஸ்பிஜி, கடற்படை மற்றும் தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ‘மார்க்கோஸ்’ எனப்படும் கடல் செயல்வீரர் படை வீரர்கள் 30 பேர் தயார் நிலையில் உள்ளனர். இதனை போன்று கடலில் மூழ்கி வெளியே வருவதில் திறன்படைத்த உள்ளூர் மீனவர்கள் 10 பேர் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

காந்திமண்டபம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையை சுற்றி 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் 164 வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிவேக ரோந்து படகுகள் 4ம், தமிழ்நாடு மரைன் போலீஸ் பிரிவை சேர்ந்த 160 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6 விரைவு ரோந்து படகுகளும் கன்னியாகுமரி கடல் பகுதிகளை சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனை போன்று கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளை வான்வெளியில் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தங்கியுள்ளதால் கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது