குஜராத்தின் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். குஜராத்தின் சூரத் அருகே கஜோத் கிராமத்தில், 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய, நவீன வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இங்கு 15 மாடிகள் கொண்ட 9 அடுக்குமாடி கட்டிடங்களில் 4,500 வைர நிறுவன அலுவலகங்கள் இடம் பெற்றுள்ளன. பிரமாண்டமான இந்த வர்த்தக மையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘வைர நகரமான சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது.

இனி வைரத்தை பற்றி உலகில் யார் பேசினாலும் சூரத் வர்த்தக மையமும், இந்தியாவும் குறிப்பிடப்படும். சூரத்தின் வைர தொழில்துறை 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய வர்த்தக மையம் மூலம் மேலும் 1.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்த இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அடுத்ததாக, எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும்’’ என்றார். மேலும் சூரத்தில் புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Related posts

காரியாபட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்