பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மனு முழு விவரம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 50 சதவீத நிதி உடனே வழங்க வேண்டும்: சமக்ரசிக்க்ஷா திட்ட பணிகளுக்கான நிதியை விடுவியுங்கள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

1) சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு, ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதன பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியை பெறுவதற்கும், ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தினால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக்குறைவு, நடப்பு நிதியாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறைவடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமதமாகி, இறுதியாக கட்டிமுடிக்கும் தேதியை டிசம்பர் 2027-ல் இருந்து டிசம்பர் 2028ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்திவிடும். கட்டம்-Iக்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டு குழு பரிந்துரைத்துள்ளவாறும் இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
2) சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில், தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும். தேசிய கல்வி கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழி கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உட்பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படின், தமிழ்நாடு மாநிலமும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும். சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடன் விடுவித்திட வேண்டும்.
3) இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்கப்படும் கொள்கையால், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முக்கிய பிரச்னையில் பிரதமர் தலையிட்டு நிரந்தர தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது