நாட்டின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: நாட்டின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன். நாளை தாக்கல் செய்யப்படும் ஒன்றிய அரசின் பட்ஜெட் நல்ல காலத்துக்கு வழிகாட்டும். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுக்கான செயல்திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவது எங்களது கனவு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளை விட, மிக வேகமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு எதிர்க்கட்சிகள் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். அரசியலைக் கடந்து தேச நலனை முதன்மையாக வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். சில கட்சிகள் எதிர்மறையான அரசியல் செய்து வருகின்றன. நாட்டுக்காகவே நாட்டு மக்கள் நம்மை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர், அரசியலுக்காக அல்ல. தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல. இந்த மேடையை, எதிர்க்கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அவை அரசியல் செய்வதற்கான அவை அல்ல, 140 கோடி இந்திய மக்களின் குரலை எழுப்புவதற்கான அவை; எந்த விஷயம் குறித்தும் விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி