பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: பாஜக அளித்த புகாரில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக அளித்த புகாரில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனால் ராஜஸ்தானில் பரத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பிக்பாக்கெட்காரர்கள் ஒருவரின் பாக்கெட்டில் பணம் எடுக்க விரும்பினால், முதலில் அவர்கள் செய்வது கவனத்தை திசை திருப்புவதுதான். ஒரு பிக்பாக்கெட் செய்பவர் முன்பக்கத்திலிருந்து வந்து கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொருவர் பின்னால் நின்று பாக்கெட்டுகளிலிருந்து எடுக்கிறார். மூன்றாவது ஒருவர் தேவைப்படும்போது மிரட்டுகிறார். இதேபோல் தான், பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்புகிறார், அதானி பாக்கெட்டுகளை எடுக்கிறார், அமித்ஷா லத்தியை பயன்படுத்துகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

இதனால் ராகுல் காந்தியின் தொடர் விமர்சனங்கள் பாஜகவினரை கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடமும் பாஜகவினர் புகார் கொடுத்தனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25ம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்