பிளஸ் 2 படிக்காமல் பட்ட மேற்படிப்பு உதவி பேராசிரியர் பணி வழங்க தடை: அரசுகள் வழிமுறை ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பிஎட் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக கடந்த 2019 ஆகஸ்ட்,அக்டோபரில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு ஜெ.கோபிகிருஷ்ணா என்பவர் விண்ணப்பித்திருந்தார். அவர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நேரடியாக இளங்கலை பட்டம் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று எம்பில் படிப்பையும் முடித்துள்ளார். 2019ல்தான் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இது அரசின் விதிகளுக்கு முரணானது என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியும், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டனும் ஆஜராகி, வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு முதுநிலை பட்டம், எம்பில் படித்து தேசிய தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் பிளஸ் 2 தேர்வை பல ஆண்டுகள் கழித்து தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கல்வி தகுதிக்கு சில விதிமுறைகளை வைத்துள்ளது. அதன் அடிப்படையில் 10ம் வகுப்பு முதல் வரிசையாகத்தான் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, அவரது மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இதுபோன்று நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒன்றிய, மாநில அரசுகளின் பணிகளுக்கு செல்ல முடியாமல் பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கு உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்