இந்த கல்வியாண்டில் பிளஸ்2 தேர்வு எழுதியவர்களில் உயர்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சேகரிப்பு: 21ம் தேதி முதல் பள்ளிகளில் உதவி மையங்கள் திறப்பு

வேலூர்: இந்த கல்வியாண்டில் உயர்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த பிளஸ்2 மாணவர்களின் விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி முதல் பள்ளிகளில் உதவி மையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை உறுப்பினர் செயலாளர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் முதல்வன் திட்டம் சார்ந்து இவ்வாண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் செயல்பாடுகள் ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வாண்டு 10ம் மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் இணைத்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழு உருவாக்கிட தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. ஏப்ரல் 3ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவடைந்துள்ளதால் பொதுத் தேர்வுக்கு பின்னர் அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கையை உறுதி செய்ய உதவி மையங்கள் வரும் 21ம் தேதி முதல் சார்ந்த பள்ளிகளில் அமைக்கப்படவுள்ளது.

எனவே 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தங்கள் உயர்கல்விக்குத் தேவைப்படும் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெற்று கொள்ளலாம். இந்த உதவி மையங்களில் தலைமை ஆசிரியர், உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற அப்பள்ளியை சார்ந்த ஆசிரியர், முதன்மை கருத்தாளர், மற்றும் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர் என 4 பேர் கொண்ட குழு செயல்படவுள்ளது. அதற்கான தகுந்த சுற்றறிக்கைகளை சார்ந்த மாவட்ட கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர்கள், முதனமைக் கருத்தாளர்கள் தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பிட வேண்டும்.

பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளைப் பயன்படுத்தி, உயர்கல்வி சேர்க்கைக்கான படிவங்கள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் அவ்வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ள உயர்கல்வி வழிகாட்டல் செயல்பாடுகள் அனைத்திலும் மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக இவ்வாண்டு அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ள (கேட், ஜெஇஇ, நீட் போன்ற) மாணவர்களின் பட்டியலை சேகரித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது