ப்ளாஸ்டிக் என்னும் அழியா அரக்கன்!!!

உலகெங்கும் வருடம் தோறும் சராசரியாக 380 டன் ப்ளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 9% ப்ளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யக்கூடியது. எங்கும் ப்ளாஸ்டிக் எதிலும் ப்ளாஸ்டிக் என வாழ்வில் எங்கும் விரவிக் கிடக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாளையேனும் நாம் ப்ளாஸ்டிக்கை தொடாமல் கழித்திருக்க வாய்ப்பே இல்லை என்ற அளவில் உலகெங்கும் வியாபித்து கிடக்கிறது. நமது இரத்த அணுக்களில் கூட கலந்து கிடக்கும் அளவிற்கு ப்ளாஸ்டிக் நமது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்கிறது ப்ளாஸ்டிக் உபயோகம் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த ப்ளாஸ்டிக்கினால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்கு என்பது ஏராளமானது. ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக ப்ளாஸ்டிக் குறிப்பாக டிஸ்போசபிள் ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்கிற சிறப்பான நாளாக முன்னெடுக்கிறது. உலக நன்மைக்காக நாம் அனைவரும் இதை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது.

நாம் பயன்படுத்திய பிறகு தெருவோரங்களில் தூக்கி எறியும் நெகிழிக் குப்பைகளை ஆடு, மாடு, கோழி போன்ற அப்பாவி உயிரினங்கள் தெரியாமல் விழுங்கி பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாவதோடு உயிரிழக்கவும் நேரிடுகிறது. சாலையோரம் குப்பைமேடுகளில் கிடக்கும் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் கவர்களையும் மாடுகள் உண்டு வயிறு பெருத்து அவதிப்படுவதை பல இடங்களில் காணலாம். மாடுகளின் வயிற்றில் குறைந்த பட்சம் 30 முதல் 50 கிலோ செரிக்காத ப்ளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதாக சொல்கிறார்கள் விலங்குகள் நல அமைப்பினர். அந்த மாடுகள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. அதனை டாக்டர் அறுவை சிகிச்சை மூலம்அகற்றுவார்கள். அந்த மாடுகளின் வயிற்றில் சில சமயங்களில் 70 கிலோ வரையில் கூட ப்ளாஸ்டிக் கழிவுகளை அகற்றி இருப்பதாக சொல்கிறார்கள் கால்நடை டாக்டர்கள்.நாம் நாட்டை மட்டுமல்ல காடு, மலை, நீர்நிலைகள் என இயற்கையின் எதனையும் ஆரோக்கியமாக விட்டு வைப்பதில்லை இந்த நெகிழிகள். காடுகளை சுற்றி பார்த்து உலவும் மனித இனங்கள் புழங்கிய வீசியெறிந்த நெகிழிக் குப்பைகள் காட்டு விலங்குகளையும் பதம் பார்க்கத் தவறுவதில்லை. எத்தனையோ காட்டு விலங்குகள் அந்த நெகிழிக் குப்பைகளை உண்டு பல்வேறு உடல் உபாதைகளோடு போராடி உயிரையும் இழந்து வருகின்றன. இந்த வாயில்லா ஜீவன்கள் பல பல்வேறு வயிற்று உபாதைகளில் துடிப்பதை பலரும் அறிய வழியில்லை.
ஒவ்வொரு நாளும் கடலில் சேரும் நெகிழிக் குப்பைகளால் பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துகொண்டே வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் உலகை மாசுபடுத்தி வருகின்றன. ஒரு நெகிழிப் பை அழிய 15 முதல் 1000 ஆண்டுகள் ஆகும் என ஆய்வுகள் சொல்கின்றன.

நெகிழிப் பொருளில் நல்லது கெட்டது என்பதே கிடையாது… மிக மோசமானவை…மிகமிக மோசமானவை என்பதே உண்மை. நெகிழிகள் புதைத்தாலும் மக்காது. எரித்தாலும் தனது நச்சுகளை வெளியேற்றிக் கொண்டேதான் இருக்கும்.. நமது தமிழக அரசும் பல்வேறு பிரசாரங்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே ப்ளாஸ்டிக் புழக்கத்தை பெருமளவில் குறைத்துவருகிறது.பத்திரிக்கை, மீடியாக்கள், பொது நிகழ்ச்சிகள், சுவர் ஓவியங்கள், சமூக ஊடகங்களில் என ப்ளாஸ்டிக் உபயோகத்தின் தீமைகளை ஓயாமல் விளக்கி சொல்லி வருகிறது. ப்ளாஸ்டிக் என்பதே தீமையானதுதான். அதிலும் டிஸ்போசபிள் மற்றும் யூஸ் அன்ட் த்ரோ என அழைக்கப்படும் மறு சுழற்சியற்ற ப்ளாஸ்டிக்குகள் அதிக தீங்கை விளைவிப்பவை ஆபத்தானவை. டிஸ்போசபிள் டம்ளர்கள் , மெல்லிய கேரிபேக்குகள் , டீ கப்புகள் என்பவை இவ்வகையினை சார்ந்தது. இது மனித உடலுக்கு மிகமிக அதிகமாக ஊறு விளைவிப்பவை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ப்ளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது என்பது இன்றியமையாதது. ப்ளாஸ்டிக் என்பது மெல்ல கொல்லும் நச்சு போன்றது.

நமது பாரம்பரிய மஞ்சள் பைகளை மறந்து நாகரீகம் என்ற பெயரில் எப்போது நாம் (ப்ளாஸ்டிக் பைகள்) நெகிழிப் பைகளை தூக்கினோமோ அப்போதே மனிதகுலத்தை ப்ளாஸ்டிக் என்னும் அரக்கன் தீரா வியாதியாக பீடித்து விட்டான். நாம் அன்றாடம் உபயோகித்தபின் தூக்கி எறியும் காலி கேரிபேக்குகள் நமது வீட்டு சாக்கடை கால்வாய்கள் முதல் வங்காள விரிகுடாவரை அடைத்துக் கிடக்கிறது. மனிதர்களால் உலகெங்கும் தூக்கி எறியும் நெகிழிக் குப்பைகள் இன்று ஒசோனை ஓட்டையிட்டு பதம்பார்க்கும் அளவிற்கு தனது அசுர கரத்தை விரித்து வைத்திருக்கிறது. உலக சுற்றுச்சூழலை பதம் பார்க்கும் ஒரு விஷயம் உண்டெனில் அதில் ப்ளாஸ்டிக் முதலிடத்தை வகிக்கும். அரசும் பல்வேறு உத்தரவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ப்ளாஸ்டிக் கேரிபேக்கள் பயன்படுத்துவதை மற்றும் தயாரிப்பதை தடை செய்திருக்கிறது. அரசின் தடையை வியாபாரிகளும் பொதுமக்களும் தவறாமல் கடைபிடித்தாலே போதும் ப்ளாஸ்டிக் என்னும் மாய அரக்கனை ஒழித்துவிடலாம்.

மெதுவாக ப்ளாஸ்டிக் உபயோகங்களை குறைத்து பனையோலைத் தட்டுகள், சணல் பொருட்கள், மண் குடுவைகள் என இயற்கையோடு இணைந்த பொருட்களுக்கு மாற்றம் அடைவோம். இதனால் விவசாயிகளும் ஏழை உழைக்கும் வர்க்கத்தினரும் ஏற்றம் பெறுவார்கள். இயற்கைப் பொருட்கள் பயன்பாடு சுற்றுச் சூழலை பாதுகாப்பதோடு மனித இனத்தையும் நோய்நொடியிலிருந்து காக்கும். குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களிலும் இந்த பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. நாப்கின்கள் வைத்து பேக் செய்து வரும் பிளாஸ்டிக் பைகள் முதல் ஒவ்வொரு நாப்கினிலும் வைக்கப்படும் பிளாஸ்டிக் துண்டுகள் வரை இன்னொரு பக்கம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேடு நிலவி வருகிறது. போலவே நம் வீட்டு அம்மாக்கள் பாட்டிகளிடம் ஒரு பழக்கம் உண்டு யார் என்ன பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தாலும் அதை சேர்த்து வைத்து மீண்டும் பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கூடுமானவரை அவர்களுக்கும் சொல்லி புரிய வைத்து இதனை தவிர்த்து விட்டு துணிப்பைகளையும் அல்லது காகிதப் பைகளையும் பயன்படுத்த வைக்கலாம். அதேபோல் நாம் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப் இவற்றில்கூட பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகின்றன. இதிலும் கூட இயற்கையான பாதாம் அல்லது தானியத் துகள்கள் கலக்கப்பட்ட காஸ்மெடிக்ஸ்களை பயன்படுத்தலாம். இவைகள்தான் நீர்நிலைகளை நேரடியாக கெடுக்கும் பிளாஸ்டிக் ஆயுதங்கள். இப்படி பல முகங்கள் கொண்ட மெல்ல கொல்லும் நச்சுப் ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!!! மறுசுழற்சியற்ற ப்ளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாகவே தவிர்ப்போம்!!!
– தனுஜா ஜெயராமன்

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி