நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

திருவள்ளூர்: உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூகங்கள் மற்றும் வணிகங்கள் பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துவதற்கும், இந்த சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் மளிகை கடைகள் முதல் சில்லறை விற்பனை நிறுவனங்கள் வரை நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஊடுருவியுள்ளன.

இந்த பைகள் மட்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன், கடல்கள் மற்றும் நிலப்பரப்புகளின் மாசுபாட்டிற்கு காரணமாகின்றன. இது நமது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீங்கான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நிலையான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு, பொது மக்களாகிய நாம் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை தவிர்க்குமாறும், அதற்குண்டான மாற்று பொருட்களை பயன்படுத்தியும் நெகிழி பைகளுக்கு பதிலாக நமது பாரம்பரிய வழக்கமான மஞ்சப்பை போன்ற துணி பைகளை பயன்படுத்துமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா