கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்: உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை என்பது நாடு முழுவதும் இருக்கிறது.

இருப்பினும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறை கூடிய விரைவில் சரி செய்யப்படும். துணை வேந்தர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் பொதுமக்களுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும். காலியாக உள்ள மூன்று பல்கலைக்கழக (மெட்ராஸ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்) துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்களும் தமிழ் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் குற்றச்சாட்டு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ஆளுநருடன் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. அரசியல் தவிர்த்து, நிர்வாக ரீதியாக ஆளுநர் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை