டூர் போக பிளான் போடுறீங்களா… இத மிஸ் பண்ணாதீங்க… சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சின்னச்சுருளி அருவி

*கோடைவெயிலை சமாளிக்க படையெடுப்பு

வருசநாடு : சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலில் அமைந்த சின்னச்சுருளி அருவியில் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வருசநாடு மேகமலை மலையடிவாரத்தில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த அருவியில் மூலிகை கலந்து தண்ணீர் வருவதாக கூறி சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இந்த அருவிக்கு செல்ல தேனி பஸ் நிலையத்திலிருந்து கடமலைக்குண்டு வழியாக கோம்பைத்தொழு பேருந்தில் ஏறி சின்னச்சுருளி அருவிக்கு செல்லலாம். இதனைத் தொடர்ந்து அருவிக்கு இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு சாலைகள் மிகவும் ரம்யமாக அமைந்துள்ளது.

இந்த அருவிக்குச் செல்லும் முன்பாக ஊராட்சி சார்பிலும், வனத்துறை சார்பிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடியில் ரூ.25 முதல் ரூ.50 ரூபாய் வரை நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்பின்னர் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் அருவியை சுற்றிலும் காவல்துறை வனத்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு பணிகள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அருவியின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைத்தொழு கிராமத்தில் மூலிகை கலந்த அதிரசம் சேவு, முறுக்கு, மிகவும் பிரசித்தி பெற்றது.

இதை வாங்குவதற்காக சிலர் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு மாதத்திலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் இந்த சின்னச் சுருளி அருவியின் மேல் பகுதியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அருவியை சுற்றிலும் கரடி, மான், யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த அருவிக்கு செல்ல பகல் நேரங்களில் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் யாரும் தங்குவதற்கோ அல்லது உள்ளே செல்வதற்கோ அனுமதி கிடையாது. அதனை மீறி செல்பவர்கள் மீது மேகமலை வனத்துறை கடும் சட்டத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என வனத்துறை எச்சரிக்கை விடுத்தும் வருகிறது.

இந்த சின்னச் சுருளி அருவிக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும் புனித நாட்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், மலைப்பகுதியில் அதிகளவில் மூலிகை இருப்பதால், அந்த மூலிகையில் பட்டு தண்ணீர் கொட்டுவதால் இந்த அருவியில் குளிப்பது புத்துணர்ச்சியை தருவதாக இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆண்கள் பெண்கள் தங்குவதற்கும் உடை மாற்றுவதற்கும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும் மேலும் அருவி அருகே உள்ள பகுதிகளில் சிமெண்ட் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

எந்த டைம்மில் போகலாம்

இந்த சின்ன சுருளி அருவி இருக்கும் இடம், மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி. எனவே அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கே காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்குச் சென்று குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

எப்படி செல்வது

தேனியில் இருந்து இந்த சின்ன சுருளி அருவிக்கு செல்ல வேண்டும் என்றால், கடமலைக்குண்டு வழியாக செல்லலாம். தேனியிலிருந்து கடமலைக்குண்டுக்கு பேருந்து வசதி இருக்கிறது. அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் சின்ன சுருளி அருவிக்கு செல்லலாம். மதுரையில் இருந்து பொதுப் போக்குவரத்தில் செல்ல நினைப்பவர்கள் ஆண்டிபட்டி சென்று அங்கிருந்து கடமலைக்குண்டு வழியாக செல்லலாம் .

எப்போ சீசன்

இந்த சின்ன சுருளி அருவி கோடைக்காலத்தில் நீரின்றி வறண்டுவிடுவது வழக்கம். இயற்கையில் பல அற்புதங்களை ரசித்தவாறு அருவியில் குளிக்க வேண்டும் என்றால், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை இந்த அருவிக்கு வரலாம். இந்தக் காலகட்டத்தில் வரும்போதும் நீர் வரத்து நிலவரத்தை தெரிந்து கொண்டு வருவதே நல்லது.

நீர்வரத்து அதிகரித்தால் தடை

இந்த அருவியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு கருதி நீர் வரத்து அதிகரிக்கும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும். எனவே, இங்கு வரும் முன்னர் நீர் வரத்து நிலவரத்தை தெரிந்துகொண்டு வந்து மகிழ்ச்சியாக குளித்து உற்சாகத்துடன் திரும்புங்கள்.

Related posts

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை