பிளைய்ன் சேலையுடன் இணைந்த டிசைனர் பிளவுஸ்!

எத்தனை யுகங்கள் கடந்தாலும் அத்தனைப் பெண்களாலும் விரும்பப்படும் சேலை காம்போ இந்த டிசைன்களே இல்லாத சேலையுடன் இணைந்த டிசைனர் அல்லது அதீத வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ்கள்தான். அதிலும் காட்டன், லினென், சாட்டின், பூனம், ஜார்ஜெட், காதி, இப்படி எந்த துணிகளிலும் கூட இந்த பிளெய்ன் சேலைகளைப் பயன்படுத்தலாம். மேலும் உடலை உறுத்தாத, கடினமாக்காத சேலை ஸ்டைல் எனில் அது பிளைய்ன் சேலை+ ஹெவி டிசைனர் பிளவுஸ்கள்தான். இன்னும் இந்த கிளாசிக் காம்போக்களை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் சொல்கிறார்கள் ஷாமினி, சாவிநிதி, முரளி.

சாவிநிதி (டிசைனர்)

லேசான, அதே சமயம் கிராண்ட் லுக் வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் தேர்வு செய்வது இந்த புடவைக் காம்போவைத்தான். பொதுவாகவே இப்போதையப் பெண்கள் அதிகம் புடவை கட்ட விரும்புகிறார்கள். ஆனால் காலநிலைதான் சதி செய்கிறது. அடிக்கும் வெயிலுக்கு புடவையா என புடவையைப் பார்த்தாலே உடலின் எனர்ஜி டவுன். எப்படித்தான் அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என நமக்கு முந்தைய தலைமுறை பெண்கள் புடவையிலேயே 24 மணி நேரமும் செலவிடுகிறார்களோ. நினைத்தாலே சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் குறைந்தபட்சம் வீட்டில் விசேஷம், அலுவலகத்தில் டிரெடிஷனல் டே, திருமண வைபோகங்கள் என இங்கெல்லாம் புடவை கட்டவில்லை எனில் அவ்வளவுதான் அப்பா, பாட்டி என நம்மைக் கட்டம் கட்டிவிடுவார்கள். எக்கால இளம் பெண்களுக்கும் இந்த இக்கட்டான சூழலில் கை கொடுப்பது பிளெய்ன் சேலைகள் அதனுடன் இணைந்த ஹெவி டிசைனர் புடவைகள். குறிப்பாக பிளைய்ன் புடவைகளை மட்டும் பிளவுஸ்களை அடிப்படையாகக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் லுக் மாற்றம் செய்யலாம். இங்கே யாஷிகா ஆனந்த் பிளைய்ன் அரக்கு நிறப் புடவையுடன், மலர்கள் டிசைன் செய்த மெட்டீரியலில் போட் நெக் பிளவுஸ் அணிந்திருக்கிறார்.

இதன் ஸ்பெஷல் எவ்வித கிராண்ட் லுக் நகைகளோ, அல்லது வேலைப்பாடுகளோ இல்லாமல் சட்டென ஒரு ஃபார்மல், அல்லது போல்டான பெண் லுக் கொடுத்துவிடும். அலுவலக சந்திப்பு, சிறப்பு விருந்தினராக என இந்த ஸ்டைலைப் பயன்படுத்தலாம். அதே போல் இதே சேலைக்கு கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்தால் கொஞ்சம் கவர்ச்சியான, செக்ஸி லுக் கிடைக்கும். நண்பர்களுடன் சந்திப்பு, பார்ட்டி, ஜாலியான மீட் என அணியலாம். இதே சேலையுடன் , வெல்வெட் பிளவுஸ் அதில் கற்கள், எம்பிராய்டரி, ஜமிக்கி வேலைகள் செய்த பிளவுஸுடன் மேட்ச் செய்துகொள்ள கிராண்ட் பார்ட்டி, திருமணம், வீட்டில் பெரிய விசேஷம் என அணியலாம். இப்படி டிசைனர் சவிநிதி முடிக்க என்னென்ன நகைகள் இந்த பிளைய்ன் சேலைகள் காம்போவுக்கு அணியலாம் தொடர்ந்தார் கான்செப்ட் இயக்குநர் ஷாமினி சங்கர்.

ஷாமினி சங்கர்
(ஃபேஷன் கான்செப்ட் இயக்குநர்)

இப்போதெல்லாம் புடவையே கிராண்ட் உடைகள் லிஸ்டில் வந்துவிட்டன. அதனால் சின்னச் சின்ன நகைகளை மட்டும் சேர்த்தாலே சிறப்பான ஸ்டைலிங் கிடைக்கும். இங்கே யாஷிகா ஆனந்த் போட் நெக் டிசைன் பிளவுஸ் அணிந்திருப்பதால் காதணி கூட அணியாமல் புடவை+பிளவுஸை ஹைலைட் செய்திருக்கோம். அதே லுக்கில் தேவைப்பட்டால் ஒரே ஒரு பெரிய கல் தோடு, அல்லது டேங்லர் தொங்கும் தோடு மட்டும் போதும், இல்லையேல் ஸ்டட் தோடு அணிந்து நீண்ட ஹாரம் மர நகைகள் அல்லது டெரகோட்டா நகைகள் அணியலாம். இதே கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் எனில் ஆக்ஸிடைஸ்ட் நீண்ட ஹாரம் , மேட்சிங்காக தோடு, உடன் கைகளில் கஃப் என அணியலாம். போலவே சேலை நிறத்தில் கண்ணாடி வளையல், மற்றும் காதில் பெரிய ஜிமிக்கியுடன் அணியலாம். கிராண்ட் பிளவுஸ் எனில் சொல்ல வேண்டியதே இல்லை. பிளவுஸ்களை மேட்ச் செய்யும் நகைகள் எதுவாயினும் அணியலாம்’ ஷாமினியை நிறுத்தி மேக்கப் டிடெய்ல்களைப் பகிர்ந்தார் பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி (மேக்கப்)

ஃபேஸ் மேக்கப்புடன், கண்களை ஹைலைட் செய்துவிட்டு கிளாஸ் லிப்ஸ்டிக் பயன்பாடு மட்டும் இங்கே யாஷிகா பயன்படுத்தியிருப்பார். வெயில் நேரம் என்பதால் நீங்கள் மேக்கப்பைக் குறைத்து சன் ஸ்க்ரீன் மட்டும் பயன்படுத்திவிட்டு வெறும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக் கொண்டாலே முகம் பளிச்சென இருக்கும். கிராண்டான நிகழ்ச்சி, பார்ட்டி எனில் ஐஷேட்டோக்களை கொஞ்சமாக டச் செய்யலாம். இன்னும் மெட்டாலிக் ஐஷேட்டோக்கள் முகத்தின் பளபளப்பைக் கூட்டிக் காட்டும். எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைல் பயன்படுத்தலாம் விவரமாக பேசினார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா (ஸ்டைலிஸ்ட்)

யாஷிகா போல் முடியை நன்கு சீவி லூசாக விட்டாலும் நன்றாக இருக்கும். ஷோல்டர்களில் கிடக்கும் நயன்தாரா ஸ்டைல் மீன் வால் சடை(பூரான் சடை எனவும் சொல்வர்), முன் முடியை வெளியே எடுத்துவிட்டு கழுத்துப் பகுதியில் படும்படியான போனி டெயில், இப்படி எதுவும் கேஷுவல் லுக் பிளைய்ன் சேலைகளுக்குப் பயன்படுத்தலாம். கிராண்ட் லுக் எனில் நீண்ட ஜடை, அல்லது மல்லிகை, முல்லை என அலங்காரங்களுடன் ஹேர் ஸ்டைல் அல்லது கொண்டை அதில் வைக்கப்பட்ட ஆக்ஸசரிஸ் என அலங்காரம் செய்து கொள்ளலாம்.பிளைய்ன் புடவைகளோ, அல்லது எந்த உடையானாலும் சரி டிசைன்கள் அதிகம் இல்லை என்றாலே புகைப்படக் கலைஞர்களான நாங்கள் சந்தோஷமாக வேலை செய்வதுண்டு. காரணம் லைட்டிங்கில் பெரிய மாற்றம் இருக்காது, மேலும் வின்டேஜ் ஸ்டைல் கிளாசிக் சினிமாட்டிக் லுக் இந்த சேலைகளில் சுலபமாகக் கிடைக்கும் என்கிறார் புகைப்படக் கலைஞர் முரளி.
மாடல்: நடிகை யாஷிகா ஆனந்த்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அஷ்வினி வைஷ்ணவ்!