பழநி மலைக்கோயிலில் இடைப்பாடி பக்தர்களுக்கு இரவில் தங்கி வழிபட உரிமை கிடைத்த சுவாரசியம்: ஆன்மிக தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சேலம் மாவட்டம், இடைப்பாடியில் இருந்து வரும் பக்தர்களின் வழிபாட்டு முறைகள், விரத முறைகளில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் நிறைந்துள்ளன. இதுகுறித்து பழநியாண்டவர் கல்லூரியின் துறை தலைவர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

* இதுகுறித்து அவர் கூறியதாவது:

முருகனின் சமேதரரான வள்ளி தங்கள் குலத்தில் பிறந்தவர். வள்ளியை திருமணம் செய்து கொண்டதால் முருகன் எங்களது மைத்துனர். இதனால் எங்கள் மைத்துனருக்கு வருடந்தோறும் தைப்பூசம் முடிந்ததும் சீர் கொண்டு வருகிறோம் என்று உரிமையுடன் இடைப்பாடி பக்தர்கள் கூறுகின்றனர். பழநி கோயிலில் தைப்பூசத்திற்கான கொடி ஏற்றப்பட்டதும், இடைப்பாடி பகுதி கிராமமக்கள் பாதயாத்திரைக்கான கங்கணம் கட்டி விரதத்தை துவங்கி விடுவர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாலின பேதமின்றி ஒட்டு மொத்த கிராமமக்களும் விரதமிருப்பர். பழநி முருகனை தரிசித்த பிறகு, வீட்டிற்கு தங்களது வீடுகளுக்கு திரும்பி படையலிட்ட பிறகே அவர்களது விரதம் நிறைவேறும். இடைப்பட்ட நாட்களில் முருகனுக்கு படையல் போடுவதற்கு முன்பு பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பக்தியுடன் விரதமிருந்து தங்களது மைத்துனரை வழிபடுகின்றனர் இடைப்பாடி மக்கள்.

* இடைப்பாடி கிராமமே விழாக்கோலம்

பழநிக்கான பாதயாத்திரைக்கு முன்பு இடைப்பாடி கிராமமே விழாக்கோலம் பூண்டு விடும். பழநி முருகன் கோயில் போன்றே மாதிரி கோயில் உருவாக்கி தைப்பூசத்தன்று பழநி கோயிலில் நடைபெறும் பூஜைகளை அங்கேயும் செய்வார்கள். இடைப்பாடியில் பூஜை செய்யும் போது பழநியில் இருக்கும் முருகன் இடைப்பாடிக்கும் வந்து விடுவதாக நம்பி வருகின்றனர். தங்களது பாதயாத்திரையின் போது முருகனும் தங்களுடனேயே வருவது போல் நினைக்கின்றனர். ஆயிரக்கணக்கான இடைப்பாடி பக்தர்கள் சக்கரை காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி, தீர்த்தக்காவடி என்று விதவிதமான காவடிகள் எடுத்து கொண்டாட்டத்துடன் பழநியை நோக்கி தங்களது பாதயாத்திரையை துவங்குவர். இடைப்பாடி பக்தர்கள் தங்களது காவடிகளை அலங்கரிக்க பனாங்கு என்ற கைவேலைப்பாடுகள் நிறைந்த பட்டு துணியை பயன்படுத்துகின்றனர். இவர்களில் சிலர் மச்சக்காவடியும் எடுத்து வருவர். முருகனின் உத்தரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்களால் மட்டுமே மச்சக்காவடி எடுக்க முடியுமென்று நம்புகின்றனர்.

* குறைவின்றி நடக்கும் குடையாட்டம்

காவடி எடுக்காத இதர பக்தர்கள் முருகனின் பாடல்களை பாடி கோலாட்டம் ஆடி வருவர். இவர்களது ஆட்டங்களில் நாலாம் நாடி, எட்டாம் நாடி, சென்னிமலை கொட்டு போன்ற வித்தியாசமான வாத்திய கருவிகள் இடம்பெறும். இடைப்பாடி பக்தர்களின் தனிச்சிறப்பான குடையாட்டமும் குறைவின்றி நடைபெறும். பாதயாத்திரையாக வரும் இடைப்பாடி பக்தர்கள் வரும் வழிநெடுகிலும் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருவர். தொடர்ந்து பழநியை அடைந்ததும் சண்முகநதியில் நீராடி, நகர் பகுதிகளிலும் ஊர்வலமாக வருவர். தொடர்ந்து படி பூஜை, மலர் வழிபாடு, விபூதி படைத்தல் போன்ற சிறப்பு வழிபாடுகளை செய்வர். பழநி மலைக்கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தர்கள் சாயரட்சை மற்றும் இராக்கால பூஜைகளில் கலந்து கொள்வர். தொடர்ந்து அன்றிரவு மலைக்கோயிலிலேயே தங்கி விடுவர். மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டு, தாங்கள் தயாரித்த பஞ்சாமிர்தத்தை பகிர்ந்து கொண்டு ஊர் திரும்புவர். ஊர் திரும்புவதற்காக பழநியில் இருந்து இடைப்பாடி பகுதிக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* கோயிலில் தங்க செம்பு பட்டயம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ராஜாக்கள் ஆண்ட காலத்தில் இருந்தே பழநியில் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அப்படி ஒரு வருடம் தைப்பூச தேர் இழுக்கும்போது பூமியில் பதிந்து விட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் தேர் நகரவில்லை. அப்போது அங்கு வந்த இடைப்பாடி  பருவதராஜகுல மக்கள் ஒன்றாக சேர்ந்து தேரை இழுத்த போது தேர் நகர்ந்து நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து மனம் மகிழ்ந்த ராஜா, பருவதராஜ குலத்தினரிடம் என்ன வேண்டும் என கேட்டுள்ளார். முருகன் திருத்தலத்தில் ஒருநாள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ராஜாவும் அதற்கான செம்பு பட்டயத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

Related posts

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு