அயோத்திக்கு சுற்றுலா ரயிலில் சென்ற நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த 3 பக்தர்கள் வெப்ப அலையில் பலி: ஐஆர்சிடிசி அலட்சியம் என பயணிகள் குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லையில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட ஆன்மிக சுற்றுலா ரயிலில் சென்ற நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த 3 பக்தர்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்திய ரயில்வே துறை, ஐஆர்சிடிசி உதவியோடு பல்வேறு ஆன்மிக சிறப்பு ரயில்களை அயோத்திக்கு இயக்கி வருகிறது. அதன்படி, கடந்த 6ம் தேதி பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. அந்த ரயில், கடந்த 8ம் தேதி இரவு பீகார் மாநிலம் கயாவிற்கு சென்றுள்ளது.

கயாவை பொறுத்தவரை ேகாடை காலங்களில் அதிக வெப்பமும், குளிர்காலங்களில் அதிக குளிரும் வீசும். இதுபற்றிய சரியான புரிதலின்றி ஐஆர்சிடிசி ஊழியர்கள், 9ம் தேதி காலையில் அங்குள்ள கோயில்களை சுற்றி பார்க்க அனுமதித்ததாக கூறப்படுகிறது. அங்கு வெயில் கொளுத்திய நிலையில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதுபற்றி ஐஆர்சிடிசி தெரிவிக்காததால் பக்தர்கள் கயாவில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனர். 10ம் தேதி 6 பயணிகள் குணமடைந்த நிலையில், அங்கிருந்து ரயில் கிளம்பிச் சென்றது. கயாவில் வெப்ப அலையில் கடும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளத்தெருவை சேர்ந்த சங்கரகாந்தி(76), கடந்த 15ம் தேதி கயா மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அவரது உறவினர்கள் அங்கு சென்று உடலை விமானத்தில் கொண்டு வந்தனர். இதேபோல் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த பண்டரிபாய்(62) என்ற பெண்ணும் வெப்ப அலையால் உயிரிழந்தார். அவரது உடல், கடந்த 12ம் தேதி நெல்லை மாவட்டம் முக்கூடலுக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலில் பயணித்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த குணபாலன் மனைவி ஜெயலட்சுமியும் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலியானார்.

அவரது உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 12ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இதுதவிர வெப்ப அலையில் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பயணி ஒருவர், வாரணாசியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஐஆர்சிடிசியின் அலட்சியமான அணுகுமுறைகளாலும், மருத்துவ குழு அழைத்து செல்லப்படாததாலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 3 பக்தர்களின் உயிர் பறிபோனதாக தென்மாவட்ட பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related posts

அதிமுக மாஜி கவுன்சிலர் சரமாரி வெட்டி கொலை: சென்னையில் பதுங்கிய 3 பேர் கைது

நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி

ஊர்க்காவல் படை வீரர் தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு புதுவை தலைமை செயலகம் முற்றுகை கண்ணீருடன் பெண்கள் சாலை மறியல்