சித்திரை விருந்து!

இனிப்பு, புளிப்பு எல்லாம் இருக்கும்…

சித்திரைத் திருநாள் தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வரும் ஒரு சுவாரஸ்யமான திருநாள். சித்திரை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக பலர் கொண்டாடி வந்தனர். சில தமிழ் அறிஞர்கள் அறிவியல் பூர்வமாக சில கருத்துகளை எடுத்து வைத்து தமிழர்களுக்கு தை மாதம் 1ம் தேதிதான் வருடப்பிறப்பு என்று நிறுவியதைத் தொடர்ந்து தை 1ம் தேதி முறைப்படி தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தபோதும் தமிழர்கள் இன்றளவும் சித்திரை 1ம் தேதியை சித்திரைத் திருநாளாகவே கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, இட்லி, தோசை போன்ற சிற்றுண்டியைச் சுவைத்து விட்டு மதியத்திற்கு சிறப்பு உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். பல பகுதிகளில் இந்த நாளில் சைவ உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டாலும் பல பகுதிகளில் அசைவ உணவுகளால் அசத்தி விடுகிறார்கள். ஆனால் பொதுவாக சித்திரைத் திருநாளுக்கென்று சில விசேஷ உணவுகள் இருக்கின்றன. இதைப் பெரும்பாலான வீடுகளில் செய்து சித்திரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். சித்திரைத்திருநாளில் தங்கள் வாழ்க்கை தொடங்குவதாக சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதனால் அன்றைய தினம் நல்ல நிகழ்வுகள் மட்டுமின்றி சில கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழர்கள் தங்கள் உணவைச் சமைத்து சாப்பிடுகிறார்கள். அதாவது இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அனைத்து சுவைகளும் அடங்கி இருக்கும் வகையில் மாங்காய், வெல்லம் மற்றும் வேப்பம்பூ அல்லது வெற்றிலை போன்ற பொருட்களைக் கொண்டு பதார்த்தங்களைச் செய்கிறார்கள். இதன் நீட்சியாக மாங்கா பச்சடி, மசாலா வடை, இனிப்பு பாயசம் என பலவும் பரிமாறப்படுகிறது. குறிப்பாக சைவம் அல்லது அசைவக் குழம்புடன் கூடிய அரிசிச்சோறு, ஒரு எளிமையான ரசம் ஆகியவை இன்றியமையாத உணவாக இருக்கிறது. இதனுடன் ஸ்பெஷலாக கூட்டு சேரும் ரெசிபிகளும் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மாங்காய் பச்சடி

சித்திரை மாதத்தில் முக்கனிகள் என்று கூறப்படும் மா, பலா, வாழை ஆகியவை சுலபமாக கிடைக்கும். இதில் முதன்மை கனியான மா தான் சித்திரைத்திருநாளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதாவது மாங்காயைப் பச்சடியாக செய்து சோற்றுக்கு சுவை கூட்டுகிறார்கள். மா பச்சடி என்பது பச்சை மாங்காய், வெல்லம், சாம்பார் பொடி மசாலா மற்றும் வெற்றிலை போன்றவை கலந்து செய்யப்படும் ஒரு சுவையான பதார்த்தம். வழக்கமாக வேகவைத்த சோறு, காய்கறி, சாம்பார் உள்ளிட்ட வழக்கமான உணவுகளுடன் மாங்காய் பச்சடி ஒரு அல்டிமேட் ருசியைத் தருகிறது. சித்திரைத் திருநாளுக்கு இந்த மாங்காய் பச்சடி ஒரு ஸ்பெஷல் ரெசிபியாகவே பார்க்கப்படுகிறது.

மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்

மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் என்பது பூசணிக்காய் மற்றும் துவரம் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு எளிமையான ஊட்டச்சத்து நிறைந்த சாம்பார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் முழுக்க இந்த சாம்பார் ஹிட் அடிக்கிறது. மஞ்சள் பூசணிக்காய் போட்டு செய்யப்பட்ட சாம்பார் என்பதால் இது சாம்பாரிலேயே கொஞ்சம் தனித்துவம் மிகுந்தது. சற்று இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்த சாம்பார் சூடான புழுங்கல் அரிசி மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.

அரைச்சுவிட்ட ரசம்

சமையலுக்கான அயிட்டங்களில் ரசம்தான் ஒரு அரிய கண்டுபிடிப்பு. சைவமோ, அசைவமோ… அதனைச் சாப்பிட்டு விட்டு இறுதியில் ரசம் ஊற்றி சாப்பிட்டால்தான் அந்த சாப்பாடே நிறைவு பெறும். தென் மாநிலங்கள் மட்டுமின்றி, வட இந்திய மாநிலங்களிலும் ரசத்திற்கு எப்போதும் மவுசு ஜாஸ்தி. தக்காளி ரசம், புளி ரசம் என நீளும் வரிசையில் அரைச்சுவிட்ட ரசம்தான் சித்திரைத் திருநாளுக்கு தோதாக இருக்கிறது. பருப்பை அரைத்து, மிளகு சுவை கொண்ட புளித்தண்ணீர் மற்றும் புதிதாக அரைத்த ரசம் மசாலா கலவையில் சேர்ப்பதன் மூலம் இந்த ரசம் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து வித உணவுக்கும் நல்ல பைனல் டச் உணவு. கசப்புச்சுவை வேண்டும் என்பதற்காக சிலர் வேப்பம்பூ ரசத்தையும் செய்து பரிமாறுவார்கள்.

அவல் பாயசம்

எந்த விருந்தாக இருந்தாலும் இனிப்பு அவசியம். சித்திரைத் திருநாளும் அதுவுமாக இனிப்பு இல்லாமல் விருந்தைக் கொடுக்க முடியுமா? சித்திரை விருந்துக்கு அவல் பாயசம்தான் அன்று முதல் இன்று வரை அசத்தல் ஜோடி. நல்ல தரமான அவலைப் பாலில் ஊறவைத்து கொதிக்க வைத்து, இனிப்பு கலந்து வழங்குவதே அவல் பாயசம். இது சமைக்க அதிக நேரம் எடுக்காது. விரைவில் செய்து விருந்தைப் பரிமாறலாம். இவ்வாறு இனிப்பு, புளிப்பு, கசப்பு என பல சுவைகளுடன் சித்திரைத் திருநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்வோம்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு