பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

சென்னை: சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுக்குள் விமானம் மூலம் பயணிக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்து போகின்றன.
இந்தியாவிலேயே முக்கிய விமான முனையமாக திகழும் சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் பல தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவது பயணிகளுக்கு பல்வேறு வகையில் சிரமங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

விமான நிலையத்துக்குள் சென்று பயணிகளை “பிக்அப்” செய்து வர வேண்டுமானால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. வாகனங்களில் உள்ளே செல்பவர்களை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மதிப்பதில்லை என்றும், அவர்களை வாகனங்களுடன் விரட்டுவதிலும், அவர்களிடம் எந்த வகையிலாவது மிரட்டி வசூல் செய்வதிலும்தான் குறியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் “இந்த இடத்தில் நிற்கக்கூடாது” என்று வாகன ஓட்டிகளை விரட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, “இந்த வழியாக செல்லுங்கள்” என்று சொல்லக் கூட மனமில்லாதவர்களா அந்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை விமான நிலையத்தில், முதல் பிரச்னை என எடுத்துக் கொண்டால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து வரும் பயணிகள் விமானத்தில் இருந்து தரை இறங்கியவுடன் கொடிக்கம்பம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக எளிதாக டாக்சிகளில் ஏறிச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

தனியார் வாடகை கார்களில் ஏறிச் செல்வதற்கு வசதியாக, இந்த “பிக்-அப் பாயிண்ட்” செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த “பிக்அப் பாயிண்ட்” ஏரோஹப் வெஸ்ட் கட்டிடத்தில் உள்ள மல்டிலெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங்க்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் பயணிகள் அனைவரும் தங்களது லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சுமார் 1 கி.மீ தூரம் நடந்து செல்லும் அவலம் உருவாகி உள்ளது. இதனால், கர்பிணிகள், முதியோர், குழந்தைகள் என விமானப் பயணிகள் பலரும் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பயணிகள் செல்வதற்கு இலவச பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்த பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பேட்டரி வாகனங்கள் “மல்டிலெவல் கார் பார்க்கிங்” கட்டிடத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் லிப்டுகள் மூலம் “மல்டிலெவல் கார் பார்க்கிங்” 2வது தளம், மூன்றாவது தளம் சென்று வாகனங்களில் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது.

மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் 3 லிப்டுகள் உள்ளன. ஒவ்வொரு லிப்டிலும் 3 அல்லது 4 பயணிகள் லக்கேஜ்களுடன் ஏறியதும் லிப்ட் “ஓவர்லோடு” ஆகிவிடும். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்த புதிய நடைமுறையால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான பயணத்தை விட விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதற்கான நேரம்தான் அதிகமாகிறது என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இத்தகைய நிலையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கும் நேற்று முதல் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்க வந்தவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். “அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்க்கிங் மேலாண்மை செய்யும் நிறுவன ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது” என தடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மெட்ரோ நிலையம் உள்ள பார்கிங் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தே வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுவும் பொதுமக்கள் மத்தியில் கோபத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 8 ஆண்டுகளாக, ஆட்டோக்கள் வருவதற்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்திற்கு வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்கனவே பாதிப்பாக உள்ளது.

இதனால் அவர்கள் ஆட்டோக்களில் வந்து, விமான நிலைய வளாகத்திற்கு வெளியே, ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோக்களில் இருந்து இறங்கி, நடந்து விமான நிலையத்திற்குள் வருகின்றனர். இந்த நிலையில் இப்போது சென்னை விமான நிலையத்திற்குள், இருசக்கர வாகனங்களில் வருவதற்கும் திடீர் தடை விதித்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆனால் விமான நிலைய பார்க்கிங் பகுதியை பராமரிக்கும் ஊழியர்கள், போலீஸ் போல் நடித்து, இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி, இனிமேல் சென்னை விமான நிலையத்திற்குள், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இருசக்கர வாகனங்களை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் அல்லது விமான நிலைய நிர்வாக அலுவலகப் பகுதியிலேயே நிறுத்திவிட்டு, நடந்துதான் வர வேண்டும் என அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங் இடங்களில் நிறுத்த அனுமதிப்பதால், பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரச்னைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொருபுறம் சென்னை விமான நிலையத்துக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில், டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

பெரும்பாலும் விமான நிலைய நுழைவு வாயிலில் உள்ள டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு எடுத்துகாட்டாக, சென்னை விமான நிலையத்தில் டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாகவும், பணம் பறிப்பதே குறிக்கோளாக இருந்ததாகவும், மயிலாடுதுறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா குற்றச்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கால் டாக்சி ஓட்டுநர்கள், ‘எதற்கெடுத்தாலும் பணம் பறிப்பதிலேயே சென்னை விமான நிலைய டேல்கேட் ஊழியர்கள் குறியாக உள்ளனர்’ என்றும் குற்றம் சாட்டுகின்றனர். நாள்தோறும் 57,000 பயணிகளும், 47,000 பார்வையாளர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை விமான நிலையம் உள்ள நிலையில், பார்க்கிங் வசதி, டோல்கேட் குளறுபடிகளால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கால்டாக்சி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்குள் 10 நிமிடத்திற்குள் வந்து சென்றால் கட்டணம் இல்லை என்பதால் வேண்டுமென்றே நேரத்தை விரயமாக்கி டோல்கேட் ஊழியர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

* வாக்குவாதங்களும், மோதல்களும் தொடர்கின்றன
பார்க்கிங் பகுதிகளை பராமரிக்கும் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் சாவிகளை பறித்துக் கொண்டு, அபராத கட்டணத்தை செலுத்தி விட்டு, வாகனங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று அடாவடித்தனம் செய்வது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்திற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பார்க்கிங் பராமரிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் அடிக்கடி தொடர்கின்றன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், இருசக்கர வாகனங்கள் வரக்கூடாது என்ற தடை உத்தரவு கடந்த 2022ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தாறுமாறாக நுழைவதால் விமான நிலைய வளாகத்திற்குள் நெரிசல்கள் ஏற்படுகின்றன. அதோடு விபத்துகளும் நடக்கின்றன. எனவே சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் இருந்து தடை உத்தரவு வந்துள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றனர்.

* வழக்கமாக, விமானங்களில் இருந்து இறங்கிய உடன் எளிதில் வாடகை கார் கிடைத்துவிடும். ஆனால், இப்போது வேறு இடத்திற்கு சென்று, மாற வேண்டியுள்ளது. பேட்டரி வாகனங்களில் சென்றாலும், லக்கேஜ் உடன் லிப்டில் ஏறிச் செல்வது கஷ்டமாக உள்ளது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குடியுரிமை, சுங்க சோதனை என நீண்ட நேரம் காத்திருந்து, வெளியே வரும் போது, பிக்-அப் பாயின்ட் புது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

மேலும், சென்னை விமான நிலைய நிர்வாகமே தற்போது, மல்டி லெவல் கார் பார்க்கிங்கை, ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுபோல் இருக்கிறது. அந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் விதிக்கும் விதிமுறைகளை, சென்னை விமான நிலைய நிர்வாகம், முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

பயணிகளை மதிக்கத் தெரியாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்தித்தாக வேண்டும் என்ற நிலைமை உருவாகிவிடும். மேலும், ரவுடிகளை போல விமான நிலைய டோல்கேட் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர். பார்க்கிங், நுழைவு மற்றும் வெளியேறும் போது உள்ள சிக்கல்கள், வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்தெல்லாம் விமான நிலைய நிர்வாகம் முறையான விசாரணையை நடத்த வேண்டும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்