பிச்சாவரம் அருகே குளித்து கொண்டிருந்தபோது சென்னை ஐடி ஊழியர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி: புதுவையிலும் ஒருவர் உயிரிழப்பு

புவனகிரி: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண் உள்பட 6 ஊழியர்கள் நேற்று 4 மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சென்று சுற்றி பார்த்து விட்டு, பின்னர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஷாம்சுந்தர் (26), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்பிரசாத் (26) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதைபார்த்து மற்றவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், பெங்களுருவில் உள்ள ஐடி நிறுவனத்தை சேர்ந்த 11 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, பூரணாங்குப்பம் புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கடலில் குளித்து மகிழ்ந்தனர்.  அப்போது அவர்களில் கீதத்தேஷ், சந்துரு, டெரன்ஸ் ஆகியோரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதை பார்த்த லைப்கார்டு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். இதில் டெரன்ஸ் (31) என்பவர் உயிரிழந்தார்.

* கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (15), அவினாஷ் (15). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் மாலை 3 மணியளவில் தீர்த்தகிரி அருகே கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். இவர்களுடன் நண்பர்களான சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்த மாணவனும், காகிதப்பட்டறையை சேர்ந்த மாணவனும் சென்றனர்.

அங்கு 4 பேரும் டிப்பர் லாரிகள் குவாரியில் இறங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட மண் பாதை வழியாக குட்டைக்குள் இறங்கி சென்றனர். முதலில் சரவணன், அவினாஷ் ஆகியோர் செல்ல அவர்களை தொடர்ந்து மற்ற 2 பேர் சென்றனர். முன்னால் சென்று கொண்டிருந்த 2 பேரும் பாதை முடியும் இடம் தெரியாமல் கால் வைத்த போது அப்படியே தடுமாறி உள்ளே விழுந்தனர். இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(16), 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று வளையாம்பட்டு ஊராட்சி வேப்பமரத்து சாலை பகுதியில் ஏரி நடுவில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் பழகி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வன் திடீரென கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

Related posts

கரூர் ஆத்துப்பாளையம்: செப். 9 முதல் நீர் திறப்பு

ரகம் ரகமாக மின்னும் ராக்கிகள் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்!

சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!!