ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!

சென்னை : ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இத்திட்டம், 1 கால் பாதிப்படைந்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் 2023-2024-ம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ரூ.450.00 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை :

இருகால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் 2011-2012-ம் நிதியாண்டு முதல் துவக்கப்பட்டு, நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.2018-2019-ஆம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப் பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 2023-2024-ம் நிதியாண்டிற்கான சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 17.04.2023 அன்று நடைபெற்ற இத்துறையின் மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை