அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இன்று 2ம் கட்ட பொது கலந்தாய்வு: அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின் 2ம் பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்காக, 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ-மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடந்த மாதம் (மே) 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். தமிழகத்தில், பொதுக்கலந்தாய்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் பொது கலந்தாய்வு கடந்த 1ம் தேதி தொடங்கி 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதில், 40,287 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில், 15,034 பேர் ஆண்கள், 25,253 பேர் பெண்கள். மேலும் இவர்களில் 10,918 மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.
இதனையடுத்து 2ம் கட்ட பொது கலந்தாய்வு இன்று (திங்கள்) தொடங்கி 20ம் தேதியுடன் முழுவதுமாக நிறைவடைய உள்ளது. அதனை தொடர்ந்து 22ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு