நாளை நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்று ஜூன் 4ம் தேதி முடிவுகள் வௌியாகின. இதில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வு நாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து நாளை தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 250 நகரங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

இந்த சூழலில் நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் கசிந்ததாக தகவல் பரவியது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இளநிலை நீட் தேர்வில் நடந்தது போன்று, முதுநிலை நீட் தேர்வு விவகாரத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளது. அதுகுறித்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும் வரை ஞாயிற்றுக்கிழமை(நாளை) நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்.

குறிப்பாக ஒரு இடத்தில் காலையிலும், மற்றொரு இடத்தில் மாலையிலும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மேலும் முறைகேட்டுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், “முதுநிலை நீட் தேர்வு நடக்க இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. அதனை 2 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதனை எவ்வாறு திடீரென ஒத்தி வைக்க முடியும். அப்படி செய்யும் பட்சத்தில் 4 லட்சம் பெற்றோர்கள் பாதிப்படைவார்கள். மேலும் அத்தனை மாணவர்களின் எதிர்காலத்தையும் நாங்கள் சிக்கலில் தள்ள முடியாது. அதேபோன்று கடைசி நேரத்தில் இப்படி வைக்கப்படும் கோரிக்கையை கண்டிப்பாக ஏற்கவும் முடியாது. எனவே இந்த மனுக்களை விசாரிக்க முடியாது” என்று தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்