பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டியுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மூதாட்டி

*போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை தோறும் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வருகின்ற சிலர் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பாட்டிலில் எடுத்து வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருகின்றவர்கள், ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க வருகின்றவ்கள் உள்ளிட்டோரிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இதற்காக காவல் துறையால் கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் போலீஸ் அவுட்போஸ்ட் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் மனுக்களுடன் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வருகை தந்தவண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னர் அனுப்பி வைத்தனர். பாட்டிலில் தண்ணீர் கொண்டுவந்தவர்களிடம் சந்தேகம் இருப்பின் அதனை அவர்களை கொண்டு குடிக்க செய்து சோதனை செய்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு மூதாட்டியை போலீசார் சோதனையிட்ட போது அவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில், தீப்பெட்டி ஆகியவற்றை வைத்திருந்தார். அவரை போலீசார் தனியே அழைத்து சென்று விசாரித்தனர். அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை போலீஸ் அவுட்போஸ்ட்டில் அமர வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘திங்கள்சந்தை அருகே காரங்காடு, மேல ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சூசை மிக்கேல் மனைவி ரோஸ்லி. இவர் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் தனது மகன் சேவியர்ராஜ் என்பவருக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய கோரி பத்மநாபபுரம் ஆர்டிஒவிடம் மனு அளித்திருந்தார்.
அவரது கோரிக்கை தொடர்பாக பத்மநாபபுரம் சப் கலெக்டரால் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவில் திருப்தியளிக்காத பட்சத்தில் குமரி மாவட்ட கலெக்டருக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த 5ம் தேதி குமரி மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீட்டு மனு அளித்திருந்தார். அது மீண்டும் பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றது. அதில் ஏற்கனவே விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கலெக்டரிடம் அளித்த மனு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வழியில்லை என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரோஸ்லி கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார். ரோஸ்லி பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி ஆகியவற்றையும் எடுத்து வந்திருந்தார். மேலும் அவர் எனக்கு வாழ வழியில்லை. அதனால் சாகப்போகிறேன் என்றும் கூறிக்கொண்டு இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related posts

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு