அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு!

கரூர்: நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தனது மனைவி, மகளை மிரட்டி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதேபோல், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் என்பவரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

முன்ஜாமீன் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த ஜூன் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மூணாறு, பக்கத்து மாவட்டங்களான திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.

2 தனிப்படைகள் வட மாநிலங்களில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தரப்பு சார்பில் நேற்று மாலை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கூறியுள்ளார். இந்த மனு இன்று (2ம் தேதி) காலை விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு மீதான விசாரணையை நாளை மாலைக்கு ஒத்திவைத்து நீதிபதி சண்முகம் உத்தரவிட்டார்.

 

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்