வளர்ப்பு நாயை தாக்கியவரை கண்டித்ததால் பிரச்னை ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை

ஆறுமுகநேரி: வளர்ப்பு நாயை தாக்கியவரை கண்டித்த பிரச்னையில் ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (53). இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு பிரஷர், சுகர் மற்றும் ஆஸ்துமா பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை இதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் செல்வக்குமார் என்பவர் பொன்பாண்டியனின் நாயை கல்லால் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஓட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறிவிட்டு பொன்பாண்டியன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

மாலையில் பொன்பாண்டியன் வீட்டிற்கு நடக்க முடியாமல் வந்துள்ளார். வீட்டிலிருந்த மனைவி மகேஸ்வரியிடம் போஸ்ட் ஆபீஸ் அருகே வரும்போது செல்வக்குமார் தன்னை தாக்கியதாகவும், இதனால் மூச்சுவிட முடியவில்லை என்றும் கூறி சுருண்டு விழுந்தார். மகேஸ்வரி, அவரை எழுப்பி பார்த்தபோது எந்த அசைவும் இல்லாததால் அருகில் உள்ள உறவினர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்பாண்டியனை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொன்பாண்டியனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான செல்வக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது