பெருங்குடி மண்டல குழு கூட்டம்; வாட்ஸ்அப் குழு உருவாக்கி பணிகளை முடிக்கவேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேச்சு

ஆலந்தூர்: வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குடிநீர்வாரிய தலைமை பொறியாளர் கல்யாணி, மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், செயற் பொறியாளர் முரளி முன்னிலை வகித்தனர். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள்குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள், அதிகாரி மீது சரமாரி குற்றம் சாட்டினர். கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசும்போது, ‘‘மக்களுக்கான பணிகளை நிறைவேற்றுவதில் மாநகராட்சி, சென்னை குடிநீர், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டால்தான் பணிகள் முழுமையடையும். எனவே, அனைத்து அதிகாரிகளும் உடனுக்குடன் தொடர்புகொள்ள, வார்டு கவுன்சிலர்கள் உள்ளடக்கிய வாட்ஸ் அப் குரூப்பை அதிகாரிகள் உருவாக்கிட வேண்டும்.

அதில் அன்றைய ஒவ்வொரு பணிகளையும் அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் மாநகராட்சி, மெட்ரோ குடிநீர், பொதுப்பணி துறை, மின்வாரியம் போன்ற பணிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட துவங்கும். இந்த பணிகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார். இதில், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ பேசும்போது, ‘’மழைநீர் வடிகால் பணியின்போது மின் கேபிள்கள், குடிநீர் இணைப்புகள் சிதைப்பதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பின் பணிகளை தொடங்கவேண்டும். ஒப்பந்ததாரர்கள் விரைந்து பணிகளை முடிக்காமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர்களை பிளாக் விஸ்ட்டில் வைத்து ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட வேண்டும்’ என்றார்.

 

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி