ரூ.234 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெருங்களத்தூர் மேம்பால பணி நிறைவு: விரைவில் திறக்க ஏற்பாடு

சென்னை: பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ₹234 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை வரும் வாகனங்கள், பெருங்களத்தூரை கடந்து செல்ல நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. பெருங்களத்தூரில் இருந்து பழைய பெருங்களத்தூர் செல்ல வேண்டிய வாகனங்கள் ரயில்வே கேட்டை கடப்பதற்காக வரிசைக்கட்டி நிற்பதே இதற்கு காரணம். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் ₹234 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து 2019 துவங்கின. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகள் தொய்வு ஏற்பட்டது. எனினும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்தும் வைக்கப்பட்டது.

அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி பாலம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அதேபோல், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. இதற்காக, வனத்துறையிடம் அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காத்திருந்தது, காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற காத்திருந்தது போன்ற காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது.

தற்போது மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய ₹12 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மாற்று இடத்தில் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற உள்ளார்கள். அதன் பின்னர் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்க மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுக்கு வந்துவிடும். மேம்பாலத்தின் மீது தார் சாலைகள் போடும் பணியும், மேம்பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேம்பாலத்தின் சுற்றுச்சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்துவிட்டது. எனவே இன்னும் 10 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பெருங்களத்தூர் பகுதியில் நெடுங்காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு ஏற்படும்,’’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது