திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதப் பெருமாள்

ஒரு திவ்ய தேசத்தில் அந்தத் தலத்து மூலப் பெருமாளைவிட, ராமன் பெரிதாகப் போற்றப்படுவது அனேகமாக திருப்புல்லாணியில்தான் இருக்கும். ஆனால், இந்த மூலவரான ஆதிஜகந்நாதன், ராமனின் குலதெய்வமான அரங்கனுக்குச் சமமானவர் என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தகவல். கோயிலுக்கு அருகே சென்றால், குளிர்த் தென்றலைத் தன் சிற்றலைகளால் வீசி, நம்மை வரவேற்கிறது சக்கர தீர்த்தம். இந்த சக்கர தீர்த்தம், ராவணனுக்கு முன்னவர்களான அரக்கர்களை திருமால் தன் சக்கராயுதத்தால் தாக்கி மாய்த்து, அதன்பின் அந்த ஆயுதத்தைக் கழுவி, சுத்தப்படுத்துவதற்காக உருவானது. இந்தக் குளக்கரையில், ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமமும்,  தேசிகனுக்கான சந்நதியும் அமைந்துள்ளன. ராஜகோபுரத்துள் நுழைந்தால் இடப்பக்கம் சுவாமி வாகனங்களுக்கான அறையைக் காணலாம்.

கருவறை மண்டபத்தில் வைகானஸ ஆகமம் வகுத்துத் தந்த விகனஸர், மற்றும் ரங்கநாதன் – ரங்கநாயகியை ஓவியமாக தரிசிக்கலாம். அதேபோல கருவறையைச் சுற்றிலும் 108 திவ்ய தேச பெருமாள்கள் ஓவியங்களாகப் பரிமளிக்கிறார்கள்; நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். தன்னெதிரே கருடன் பவ்யமாக வீற்றிருக்க, மூலவர், ஆதிஜகந்நாதப் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் திகழ்கிறார். தசரத மகா சக்கரவர்த்தி வழிபட்டு, தனக்குப் புத்திர பாக்கியம் அருளுமாறு இவரை வேண்டி நின்றார். பகவான் அருளாணைப்படி, இந்தத் தலத்தில்தான் தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் மேற்கொண்டாரென்றும், அந்தப் பயனாக ராமர் முதலான நான்கு சத் புத்திரர்களுக்கு அவர் தந்தையாராக விளங்கினார் என்றும் சொல்கிறது புராணம்.

இதனாலேயே ஆதிஜகந்நாதப் பெருமாளை வழிபடுவோர், பிள்ளை இல்லாக் குறை நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மையாக இத்தலத்தில் நிலவுகிறது. ராவண வதத்துக்காக தென்பகுதிக்கு வந்த ராமன், இந்தப் பகுதியிலிருந்துதான் இலங்கைக்கு அணை அமைத்தார் என்பதால், திருப்புல்லாணி புராண முக்கியத்துவம் வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது. இந்த ராமனின் வருகைக்காகப் பலர் இங்கே தவமிருந்திருக்கிறார்கள். அவர்களில் ஏழு தெய்வப் பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை இங்கு ஒரு சாபம் மூலமாக அனுப்பி வைத்தவர், தேவலர் என்ற முனிவர். அவர் இங்கே எம்பெருமானை நோக்கி தவமிருந்தார். அப்போது அவரது குடில் அமைந்திருந்த சோலைக்கு வந்த ஏழு பெண்களும் தம் விருப்பம்போல ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தார்கள்.

தம்முடைய குதூகலம், முனிவரின் தவத்துக்கு பாதகமாக அமைவதை அறியாத அவர்கள், எதிர்பாராதபடி தேவலரின் கோபத்துக்கு ஆளானார்கள். ‘தெய்வப் பெண்டிரின் அருங்குணம் நீங்கி, சுற்றுச்சூழல் உணராமல் ஆடிப் பாடியதால், அதையே தொழிலாக மேற்கொண்டு, ஆடவரை இன்புறச் செய்யுமாறு’ சபித்துவிட்டார் அவர். தம் பெருமையெல்லாம் சிறுமையாகிவிடும் வேதனையில் தவித்த அந்தப் பெண்கள் அவரிடம் சாப விமோசனம் கோரினர். அவரும், அவர்களை அதே தலத்தில் உறைந்திருக்கும் ஆதிஜகந்நாத பெருமாளை வழிபட்டு வருமாறும், அப்போது அங்கு வருகை தரவிருக்கும் ராமனை தரிசித்தால் சாபத்திலிருந்து மீளமுடியும் என்றும் அறிவுறுத்தினார். அதேபோல அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மட்டுமா, அங்கு வந்து யாகமும், தவமும் இயற்றிய கண்வ முனிவரும் ஓர் அசரீரி யோசனைப்படி அப்படி வந்து காத்திருந்தார். ராமர் வந்தார். சீதையை ராவணன் அபகரித்துச் சென்றிருந்தான். அவள் இலங்கையில் அவனால் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் அனுமன் வாயிலாகத் தெரியவந்திருந்தது. இலங்கைக்கு எப்படிச் செல்வது? பாரதத்தின் தென் பகுதியையும், இலங்கையையும் பிரிக்கும் கடலைத் தாண்டி எப்படிச் செல்வது? தன் கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், உலகோர் நன்மைக்காகவும் ராவணனை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த ராமன், அந்தக் கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டத் தீர்மானித்தார்.
ஆர்ப்பரித்த அலைகள் பாலம் கட்டப் பெருந்தடையாக வீசவே, ராமன், சமுத்திரராஜனை உளமாற ஆராதித்தார். அலைகளின் பேரிரைச்சல் ராமரின் விண்ணப்பதை அவன் கேட்காதபடி செய்துவிட்டனவோ, அவன் அமைதி காத்தான். அதனால் கோபமுற்ற ராமன் தன் வில்லில் அம்பு பூட்டி நாணிழுத்தபோதுதான் அந்தப் பேரொலி அலைகளையும் அடக்கி, கடலரசனையும் கதிகலங்கச் செய்தது.

ஓடோடிவந்து ராமர் காலில் விழுந்து தன் பிழை பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டி நின்றான். சினம் நீங்கி, அவனுக்கு மன்னிப்பு நல்கினார் ராமபிரான். கடலரசன் மட்டுமல்லாமல், ராவணன் தம்பியான விபீஷணனும் இங்குதான் ராமனிடம் சரணாகதி அடைந்தான். ஆக, தெய்வப் பெண்கள் எழுவர், கண்வ முனிவர், சமுத்திர ராஜன், விபீஷணன் என்று தன்னைச் சரணமடைந்தோரை சீராட்டி, பாராட்டும் ராமனின் அருட்கொடையை, இந்தக் கோயிலுக்கு வந்து செல்வோர் அனைவருமே அனுபவித்து மகிழ முடியும் என்பது தெளிவு. கடலரசனிடமிருந்து அனுமதியும், ஆதரவும் கிட்டும்வரை, ராமன் தர்ப்பைப்புல் படுக்கையில் சயனித்திருந்தார். இந்த கோலத்தை இன்றும் இக்கோயிலில் காணலாம். இந்த ராமன், ‘தர்ப்பசயன ராமன்’ என்று போற்றப்படுகிறார்.

சமுத்திர ராஜன், தன் செருக்கழிந்து ராமன் தன் நோக்கம் நிறைவேற, தன் மீது பாலமமைக்க உரிய வழி செய்து தந்தான். பிறகு, தன் தந்தையாரைப் போலவே இத்தலத்து ஆதிஜகந்நாதரை வழிபட்டார் ராமன். ராவணனை அழிக்க அற்புதமான வில்லொன்றை ஜகந்நாதர், ராமனுக்கு அருளினார். அதைக் கொண்டு ராவணனை வதைத்து வெற்றிவாகை சூடினார் ராமன். இப்படி வில்லை வழங்கியதாலேயே பெருமாள், ‘தெய்வச் சிலையார்’ என்றும் போற்றப்படுகிறார்; ராமனாலேயே சேவிக்கப்பட்டதால் ‘பெரிய பெருமாள்’ என்றும் பெயர் பெற்றார். சீதையை மீட்டு வந்த ராமன், மீண்டும் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து, அனைவரையும் பரவசப்படுத்தினார். அப்போது இங்கிருந்த மக்களும், முனிவர்களும், வேண்டிக்கொண்டதற்கிணங்க சீதை, லட்சுமணன், அனுமனுடன் பட்டாபிஷேக ராமனாகக் காட்சியளித்தார்.

அயோத்திக்குச் சென்று காணமுடியாத தம் இயலாமைக்கும் மதிப்பளித்து ராமன் காட்சி தந்த இந்த கோலத்தை, இத்தலத்திற்குப் பின்னாளில் வருவோரும் தரிசிக்க ஏதுவாக அர்ச்சாவதாரமாகவும் நிலைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொண்டனர். அதன்படி, இக்கோயிலில் இன்னொரு சந்நதியில் சீதாராமனாகக் காட்சியளிக்கிறார், ராமன். திருமெய்யம் போலவே, இத்தலத்தையும் திருமங்கையாழ்வார் ஒருவர் மட்டுமே மங்களாசாசனம் செய்திருக்கிறார். ஒரு நாயகியாகத் தன்னை உருவகித்துக்கொண்டு, அவர் இந்த ராமனைப் பாடுகிறார்.
“வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய்கேட்டு இருந்தேனே’’
– என்கிறார்.

அதாவது, ‘தன் வில்லிலிருந்து ராமன் செலுத்திய அம்புகள், இலங்கை மாநகரையே கலங்கி அழியச் செய்தன. அத்தகைய பெருவீரனான எம்பெருமானின் பின்னாலேயே சென்றதே என் உள்ளம், அது என்னிடமே திரும்புமோ? என்னை யார் எவ்வாறெல்லாம் கேலி பேசினாலும் சரி, பழித்தாலும் சரி, திருப்புல்லாணி என்ற இந்த திவ்ய தேசத்தில் நிலைத்து வாழும் எம்பெருமானின் பொய்யான உறுதிமொழியை நம்பித்தான் நான் உயிர்வாழ்கிறேன்’ என்கிறார். அது என்ன பொய்யான உறுதிமொழி? ராமன் அவதார காலத்தில் பல பெண்கள் ராமனை நினைத்து ஏங்கி, உருகினார்கள். அந்த உணர்வு, காதலாக, பக்தியாக, பாசமாக, அவரவர் மனோநிலைக்கு ஏற்ப பொங்கிப் பெருகிற்று. ஆனால் காதலுடன் அவரை அணுகியவர்கள், அவர் ஏக பத்தினி விரதன் என்ற உண்மையை உணர்ந்து விலகி நின்றார்கள். ‘இந்த அவதாரத்தில் சீதை மட்டுமே என் காதல் மனைவி. ஆனவே அடுத்த பிறவி, அவதாரம் என்று ஒன்று இருக்குமானால், அப்போது உங்கள் உள்ளக்கிடக்கை நிறைவேறலாம்’ என்று அவர்களை மென்மையாக விலக்கினார் ராமன். ஆனாலும் அவனிடம் சென்றுவிட்ட தம் உள்ளங்களை அவர் களால் திரும்பப் பெற இயலவில்லை. திருமங்கையாழ்வாரின் நாயகி நெஞ்சமும் அப்படிப்பட்டதுதான். அதனால்தான், அடுத்த அவதாரம் என்று ஒன்றிருந்தால் பார்க்கலாம் என்ற அவனது ‘பொய்’யைக் கேட்டு, அதை நம்பி தான் உயிர்வாழ்வதாகச் சொல்கிறார்! பெண்டிர் மட்டுமல்ல; இலங்கை மாநகரமே அப்படித்தான் ஏங்கிற்றாம்:

“மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்’’
– என்கிறார் கம்பர்.

‘‘ஐயனே, குபேரனது பேராதரவால் நான் பேரழகாகப் படைக்கப்பட்டேன். அதன் பின்பு, தன் தவவலிமையால் ராவணன் என்னில் வந்து குடியேறினான். நெடிதுநாள் வாழ்ந்தான். அவனும் அவனைச் சார்ந்தவர்களுமான அரக்கர்களும் பலக் கொடுஞ்செயல்கள் செய்ததால் இங்கே பாவச்சுமை பெருகிவிட்டது. இனியும் என்னால் பொறுக்க இயலாது. நீ விரைவில் வந்து, நான் பூண்டிருக்கும் தீமையை விலக்கி, என்னை ஆட்கொள்வாயாக’’ என்று இலங்கையே ராமனுக்காக ஏங்கிக் காத்திருப்பதாக கம்பர் வர்ணிக்கிறார். இந்த இரு ராமர் சந்நதிகளையும் விட்டு நீங்க மனம் வராதுதான். இங்கு தாயார் இருவர், கல்யாணவல்லி மற்றும் பத்மாஸனி தாயார்கள். கல்யாணவல்லி தாயார் சந்நதியில் அவருக்கு எதிரே குருவாயூரப்பன், கோவர்த்தனகிரி கண்ணன், சேதுகரை ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கூடவே, பத்மாவதி தாயார், கீதோபதேசம் உள்ளிட்ட பல ஓவியங்களையும் பார்த்து ரசிக்கலாம். பத்மாஸனி தாயாரை அடுத்து தல விருட்சமான அரசமரம் நெடிந்தோங்கி வளர்ந்திருக்கிறது. அதனடியில் நாகர் சிலைகள் அணிவகுத்திருக்கின்றன. ‘அச்வத்த ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்க்ஷீணாம் சநாரத’ என்று பகவான் கீதையில் அருளியதுபோல, மரங்களில் அரசமரமாக அவன் உள்ளான். இந்தத் திருப்புல்லாணியில் வாழ்ந்திருந்த புல்லர் என்ற முனிவருக்கு எம்பெருமான் இந்த அரச மரத்தடியில்தான் சேவை சாதித்தான். அதனால் இந்த மரம், ‘அசுவத்த நாராயணன்’ என்று போற்றப்படுகிறது. இந்த மரத்தில் பிள்ளைப் பேறுக்காக பிரார்த்தனை செய்து கொண்ட பெண் மணிகள் தொட்டில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்தத் தலத்தின் குறிப்பிடத்தகுந்த விசேஷம், ஆதிசேது. ஆதிஜகந்நாதர் ஆலயத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ‘ரத்னாகாரம்’ என்றழைக்கப்படும் இப்பகுதி, கடற்கரைப் பகுதியாகும். இங்கிருந்து கட்டப்பட்ட பாலம் வழியாகத்தான் ராமன், தன் பரிவாரங்களுடன் இலங்கைக்குச் சென்று, வென்று மீண்டார். அந்தப் பாலம், இப்போதும் கடலுக்குள் நீண்டதொரு ‘கல் அணை’யாகத் தென்படுகிறது. இதனருகில் சென்று தரிசிப்போருக்கு சகல பாபங்களும் தீர்ந்துவிடுகின்றன என்கிறார்கள். இந்தக் கடற்கரையில், ராமதூதனான அனுமன் தென்திசை நோக்கி நின்றிருக்கிறார். ராம தியானத்துடன் கைகளைக் கூப்பிய அந்த சிஷ்ய பாவம் மனதை நெகிழ்விக்கிறது.
எப்படிப் போவது: திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்தும் செல்லலாம். காரைக்குடியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12.30 மணிவரை; மாலை 3.30 முதல் இரவு 8 மணிவரை. முகவரி: அருள்மிகு கல்யாண ஜகந்நாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம் – 623532.
தியான ஸ்லோகம்
“புல்லாரண்யதலேது தர்ப்பசயந: பத்மாஸநா வல்லபா
தீர்த்தம் சக்ர ஸரோ விமாந மபிதத் கல்யாண நாமோஜ்வலம்
ராமத்வே சரணா கதோத்ர ஜலதி: தஸ்மிந் ஜகந்நாததாம்
பிப்ரந் இந்த்ர திசா முகோ ஜலதிநா ஸம்ஸேவிதோ ராஜதே’’

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்