விடா முயற்சியும், தளர்ச்சியற்ற தைரியமும் வெற்றிக்கு வழி வகுக்கும்!

நினைவு நல்லது வேண்டும் என்றார் பாரதியார். நல்ல நினைவுகள் உள்ளத்தில் தோன்றினால், அது வாக்கினில் வெளிப்படும் என்பதுதான் பாரதியின் கருத்து. ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள எதிர்மறைச் சிந்தனைகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்தால்,நேர்மறை எண்ணங்கள் தானே வளரத் தொடங்கும். கூடவே மனஉறுதியும் வளரும்.வாழ்க்கையில் முன்னேற முயற்சி மேற்கொள்ளும்போது, முட்டுக்கட்டைகள் இடைமறிக்கும். தடைக்கற்கள் தடுமாறி விழச் செய்யும். குறுக்கீடுகள் இடறிவிழ வைக்கும். எனினும் விழுந்தவன் எழுவான் என்ற மனஉறுதியுடன் இருக்க வேண்டும். காற்றுள்ள பந்து கீழே விழுந்ததும் மேலும் வீறுகொண்டு எழும். மனிதனும் அதுபோல எழ வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பங்கு பெற்றால் மேடையில் ஏற வேண்டுமே! தோல்வி அடைந்தால் அவமானம் ஆகிவிடுமே! நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்ற தயக்கத்தினால்தான் பல மாணவர்களின் திறமைகள் இந்த உலகத்திற்குத் தெரியாமலே போய்விடுகின்றன.பங்கு பெறுபவர்களைக் கிண்டல் செய்யும் வெறும் பார்வையாளர்கள் ஊளையிடும் நரியைப் போன்றவர்கள்.

அவர்கள் ஊளையிட்டுக் கொண்டே இருப்பார்களே தவிர, அவர்களால் எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற முடியாது. எனவே, அப்படிபட்டவர்களை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம்.
உலகில் உள்ள மனிதச் சமூகத்தில் எந்த ஒரு திறமையும் இல்லாமல் யாரும் பிறக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை மறைந்திருக்கும். நம்முள் புதைந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, அதை வெளிக்கொண்டு வருவதற்குப் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த மனோபாவம். உங்கள்திறமை மேம்பட்டு பலராலும் பாராட்டப்படும்போது உலகம் உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. அப்படி இந்த உலகம் அடையாளம் கண்டு கொண்ட ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.வறுமை மிகுந்த குடும்ப பின்னணியில் பொறுப்பற்ற தந்தை, தாயார் இசை பாடம் நடத்தி, அதிலிருந்து வரும் வருமானத்தைக்கொண்டு குடும்பம் நடத்தினார். அவர்களின் அழகு குறைந்த அருமை மகனின் படிப்புக்குச் செலவழிக்கத் தாயிடம் பணவசதி இல்லை. இந்தச் சூழலில் ஒரு அலுவலகத்தில் சாதாரண வேலைக்குச் சேர்த்துவிட்டார் அவருடைய தாய்.

தாயின் விருப்பப்படியும் குடும்பச் சூழல் காரணமாகவும் மகன் அந்த வேலையைப் பார்த்து வந்தார். இருந்தபோதும் தனது வாழ்வு வீணாகி விடுமோ? எதிர்காலம் பாழாகி விடுமோ, என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன் தாயிடம், ‘‘அம்மா கடவுள் கொடுத்தது ஒரே ஒரு வாழ்க்கை. அதையும் ஆபீஸ் பையனாகவே வீணாக்குவது புத்திசாலித்தனம் அல்ல. அதனால்,வேலையில் இருந்து விலகி விட்டேன்’’என்றார். வேலையை விட்டுவிட்டு அடுத்து நாவல்கள் எழுதத் தொடங்கினார். அதிலும் தோல்வியடைந்தார். கலை, இசை விமர்சனகர்த்தாவாக முயற்சி செய்தார். அதிலும் தோல்வியே மிஞ்சியது. இதையெல்லாம் கண்டு மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் அடுத்து நாடக ஆசிரியராக முயற்சி செய்தார். அப்போதுதான் அவரது வாழ்வில் திருப்பம் ஏற்பட்டு ஒளி வெள்ளம் பாய்ந்தது. மிகவும் புகழ்பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடகப் புலவர் பெர்னாட்ஷா தான் அந்த மாமனிதர்.

நோபல் பரிசு பெற்றபோது அவர் சொன்னது என்னவென்றால் ‘‘ஆபீஸ் பையனாக வாழ்வை வீணடித்து இருந்தால் என்னால் வாழ்வில் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்றார். அவரது விடாமுயற்சியையும், தளர்ச்சியற்ற தைரியத்தையும் மாணவர்களாகிய நீங்களும், இன்றைய இளைய தலைமுறையினரும் உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.‘‘நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வியடைவதைப் பார்த்தேன். எனக்குத் தோல்வியடையப் பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே, முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்’’ என்று சொன்னவர் அறிஞர் பெர்னாட்ஷா. ஆகவே, நம்மால் முடியாது, முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயமும் இந்த உலகில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு மூலையில் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு விடாமுயற்சியும், தளர்ச்சியற்ற தைரியத்தையும் கையாண்டு வெற்றியை வசப்படுத்துங்கள்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்