விடாமுயற்சி வெற்றி தந்தது 44 வயதில் 10ம் வகுப்பு ‘பாஸ்’: பெண் சமையலர் அசத்தல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, பெண் சமையலர் ஒருவர் விடாமுயற்சியுடன் போராடி, தனது 44வது வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி ராணி (44). இவர் அங்குள்ள அரசு பள்ளியில், சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது இரு மகள்களில் ஒருவர் திருமணம் முடித்து தனியே வசிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ராணி பங்கேற்றார். அப்போது, தமிழ் 39, கணிதம் 35, சமூக அறிவியல் 36 என மதிப்பெண்கள் பெற்றார். மீதமுள்ள ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று, மீண்டும் விடாமுயற்சியுடன் படிக்கத்தொடங்கி துணைத்தேர்வில் பங்கேற்றார். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், ஆங்கிலத்தில் 56, அறிவியலில் 70 மதிப்பெண்கள் பெற்றார். இதன் வாயிலாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சியடைந்த அவர் 236 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்வில் முதல்முறை தோல்வியை சந்தித்தாலும், வெற்றியை எதிர்நோக்கி கனவுடன் படித்து தேர்ச்சியடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த வெற்றி குறித்து அவர் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட வயது கடந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இத்தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வினையும் எழுத உள்ளேன்’’ என்றார்.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு