பெரியபாளையம் அம்மன் கோயில் தீமிதி திருவிழா

பெரியபாளையம்: அத்திவாக்கம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா நடந்தது. பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் ஊராட்சியில் தர்மராஜா திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு தீமிதி திருவிழா 10 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 28ம் தேதி காலை ஆலய வளாகத்தில் கொடிமரத்தில் கொடி ஏற்றுதல், 29ம் தேதி பகாசுரன் வதம் செய்தல், தொடர்ந்து, அம்மன் திருக்கல்யாணம், சக்கரவர்த்தி கோட்டை திருவிழா, திரவுபதி துயில் உரிதல் திருவிழா, அர்ஜூனன் தபசு, தர்மராஜா தேர் ஊர்வலம், மாடு விரட்டிப்பிடித்தல், படுகளம் பதி வட்டாரம் பெயர் தெருக்கூத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்றவை நடந்தன.

10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசன திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை ஊர் எல்லையில் விரதமிருந்து காப்பு கட்டிய 350 பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் மஞ்சள், சந்தனத்தாலும் பூக்களாலும் அலங்காரம் செய்து காத்திருந்தனர்.

பின்னர், உற்சவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்து முடித்து, வாகனத்தில் வைத்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஊர் எல்லையில் தீ மிதிக்க காத்திருந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், கன்னிகைப்பேர், திருக்கண்டலம், பனப்பாக்கம், பெரியபாளையம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Related posts

அக்னி வீர் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

ஒன்றிய அரசின் துறைகளில் 8326 பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் கோரிக்கை