பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் அத்துமீறல் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தனியார் நிறுவனம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கீழ் மாளிகை பட்டு- தும்பாக்கம் இடையே ஆரணி ஆற்றில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளை செய்து வரும் நிறுவனம் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தச்சூர் முதல் சித்தூர் வரை அதிவேக விரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்மாளிகைப்பட்டு தும்பாக்கம் கிராம பகுதியில் ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடக்க அதிவேக விரைவு சாலையை இணைக்கும் விதமாக ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இரவு நேரங்களில் இந்த மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் மேம்பாலம் பணிகளை செய்து வரும் தனியார் நிறுவனம் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணலை நிரப்பி ஏற்றிச் சென்று பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. மணலுக்கு பதிலாக எம்சாண்ட் எனப்படும் மணல் போன்ற பொருளால் பணிகளை செய்ய அந்த நிறுவனத்துக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி அந்த நிறுவனம் அனுமதியின்றி ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் இந்த அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. துகுறித்து ஆரணி ஆற்றை ஒட்டி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் சிலர் தெரிவிக்கையில், இந்த ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி நூற்றுக்கணக்கான விளை நிலங்களில் நாங்கள் பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது இரவு நேரங்களில் மேம்பாலம் கட்டும் நிறுவன அதிகாரிகள் ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அப்பகுதி விவசாயிகள் தட்டிக் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுகின்றனர். இதனால் கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து விவசாயம் செய்கிறோம். மணல் கொள்ளையால் ஆரணி ஆற்றையொட்டி அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதோடு விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் நடவு செய்த பயிர்கள் கருகும் நிலைமையும் ஏற்படுகிறது. எனவே இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி